சர்ச்சை பேச்சு! “மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் “-பொன்முடி
தகாத பொருளில் தவறான சொற்களைப் பயன்படுத்தி நான் பேசிய பேச்சுக்கு மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் என பொன்முடி தெரிவித்துள்ளார்.

சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்பு திமுக அமைச்சராக இருந்த பொன்முடி ஒரு நிகழ்வில் பேசுகையில், இரு சமயத்தாரை குறிப்பிட்டு உடலுறவு குறித்து மறைமுகமாக மிகவும் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இந்த பேச்சுக்கு திமுக கட்சிக்கு உள்ளேயும், கூட்டணி கட்சியினர் மத்தியிலும், மற்ற கட்சியினர் மத்தியிலும் கடும் எதிர்ப்புகள் எழுந்தது.
அமைச்சர் பொன்முடியின் சர்ச்சை பேச்சுக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்ததை அடுத்து, திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஒரு அறிவிப்பையும் வெளியீட்டு இருந்தார். அதில், திமுக கட்சியில் துணை பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்த அமைச்சர் பொன்முடி இன்று முதல் அந்த பதவியில் இருந்து விடுவிக்கப்படுகிறார் எனவும் அறிவித்திருந்தார்.
இதனையடுத்து, தன்னுடைய சர்ச்சை பேச்சுக்கு தான் மன்னிப்புக்கேட்டு கொள்வதாக அமைச்சர் பொன்முடி தற்போது பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” தகாத பொருளில் தவறான சொற்களைப் பயன்படுத்தி நான் பேசிய பேச்சுக்கு மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். இந்தத் தகாத கருத்தை நான் பேசியது குறித்து உடனடியாக மனப்பூர்வமாக வருந்தினேன் நீண்ட காலம் பொது வாழ்க்கையில் உள்ள எனக்கு இதுபோன்ற தடுமாற்றம் ஏற்பட்டது குறித்து நான் மிகவும் வருந்துகிறேன். பலருடைய மனதைப் புண்படுத்தும் வகையில் இப்பேச்சு அமைந்து விட்டது குறித்தும், அவர்கள் தலைகுனியும் சூழல் ஏற்பட்டது குறித்தும் நான் மிகவும் மனம் வருந்துகிறேன்” என கூறியுள்ளார்.