பெரியார் குறித்து சர்ச்சை பேச்சு! சீமான் மீது அடுத்தடுத்து போலீஸ் புகார்கள்…
பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் திமுக, திவிக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று கடலூரில் செய்தியாளர்களிடம் பேசுகையில் தந்தை பெரியார் குறித்து பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தார். சமூக நீதிக்கும் பெரியாருக்கும் என்ன சம்பந்தம்? பெண்ணுரிமைக்காக அவர் என்ன செய்தார் என பல்வேறு சர்ச்சைக்குரிய விமர்சனங்களை முன்வைத்தார்.
சர்ச்சை கருத்துக்கள் :
தாய்மொழி தமிழை சனியன், காட்டுமிராண்டி மொழி என கூறியவர் பெரியார். திருக்குறளை மலம் என்று கூறியவர் பெரியார். உடல் இச்சைக்கு தாய், மகள், உடன் பிறந்தவளோடு உறவு வைத்து கொள்ள சொன்னவர் பெரியார். பல நாடுகளில் மது புழக்கம் இருக்கும் போது இங்கு தடை செய்வது மனையுடன் படுக்க கூடாது என்று சொல்வது போல இருக்கிறது என கூறியவர் பெரியார் என கடுமையான விமர்சனங்களை பெரியார் மீது சீமான் முன்வைத்தார்.
இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர் கடுமையான எதிர்வினையாற்றி வருகின்றனர். இன்று, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்தவர்கள் சீமான் வீட்டை முற்றுகையிட முயன்றபோது போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
மீண்டும் ஆவேசம் :
பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பிய போதும் இன்று புதுச்சேரியில் பேசுகையில் மீண்டும் பெரியார் மீதான தனது விமர்சனத்தை சீமான் முன்வைத்தார். வள்ளலாரை தாண்டி பெரியார் என்ன சமூக சீர்திருத்தம் செய்தார்? பெரியார் பேசினார் என்றால் பரவாயில்லை. பெரியார்தான் எல்லாம் செய்தார் என்று சொன்னால் அது எப்படி? அம்பேத்கர், பெரியாரை ஒன்றாக வைப்பது, ஒப்பிடுவது எப்படி சரியாகும்? உலகத்தில் ஆகச்சிறந்த கல்வியாளர் என்றால் அம்பேத்கர் தான். பெரியார் யார்? தனக்கு தோணுவதை பேசிகொன்டு சென்றவர் அவர். எனவே, அம்பேத்கரையும் அவரையும் ஒப்பிட்டு பேசுவது என்பது முட்டாள்தனம்.”என்று மீண்டும் விமர்சனம் செய்தார் சீமான்.
அடுத்தடுத்த புகார்கள் :
இந்நிலையில், திமுக சார்பில் அக்கட்சி சட்டத்துறை துணை செயலாளர் மருது கணேஷ் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலத்தில், பெரியார் குறித்து சீமான் அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து தெரிவித்து வருவதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளனர்.
அதே போல, திராவிடர் விடுதலை கழகம் சார்பிலும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் , தந்தை பெரியார் குறித்து அவதூறாக பேசிய சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளிக்கப்பட்டுள்ளது.