“பழனி பஞ்சாமிர்தத்தில் கருத்தடை”….அவதூறு பரப்பிய இயக்குநர் மோகன் ஜி கைது?
பழனி பஞ்சாமிர்தத்தில் கருத்ததை மருந்து கலப்பதாக கூறிய இயக்குநர் மோகன் ஜியை காசிமேடு காவல்துறையினர் கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை : திரௌபதி, ருத்ர தாண்டவம் உள்ளிட்ட படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமான இயக்குநர் மோகன் ஜி அடிக்கடி தனக்குத் தோன்றும் கருத்துக்களை வெளிப்படையாகக் கூறி, சர்ச்சைகளில் சிக்கிவிடுவார். அப்படி தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்பதி லட்டு விவகாரம் பற்றியும், பழனி பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மருந்துகள் கலப்பதாகவும் பேசியிருந்தார்.
அவர் லட்டு விவகாரம், பற்றிப் பேசியது ஒரு பக்கம் பரபரப்பாகப் பேசப்பட்ட நிலையில். மற்றொரு பக்கம் பழனி பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மருந்துகள் கலப்பதாகக் கூறியது சர்ச்சையாக வெடித்து அவரை கைது செய்யும் அளவுக்குக் கொண்டு வந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பேசும்போது ” பஞ்சாமிர்தத்தில் ஆண்மைக் குறைவு ஏற்படுத்தக்கூடிய மாத்திரைகள் கலப்பதாக நான் கேள்விப்பட்டேன். அந்த செய்தியை வெளியே வர விடாமல் சரி செய்து பஞ்சாமிர்தத்தை வேறொரு வழக்குப்போட்டு முடித்ததாகவும் கேள்விப்பட்டேன்.
ஆதாரம் இல்லாமல் பேசவில்லை..தரம் இல்லாதது பற்றி விளக்கம் கொடுத்திருந்தாலும் மக்களுக்குத் தெளிவான விளக்கம் யாரும் கொடுக்கவில்லை. என்னிடம் அங்கு வேலை செய்த சிலர் கருத்தடை மாத்திரைகள் பயன்படுத்தியுள்ளதாகப் புகார் சொன்னதாக” மோகன் ஜி பேசி பரபரப்பைக் கிளப்பி இருந்தார்.
இந்த நிலையில், பழனி பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு பரப்பியதாக, இயக்குநர் மோகன் ஜி மீது காசிமேடு காவல்துறை வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இன்று காலை சென்னை காசிமேட்டில் உள்ள அவருடைய வீட்டில் வைத்து அவரை கைது செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இன்னும், கைது செய்தது குறித்து காவல்துறையில் தரப்பிலிருந்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.