தலைவர் அமைத்த பாதை.. பயணத்தை தொடர்கிறோம்.. மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி வீடியோ.!

சென்னை : மறைந்த திமுக தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் 101ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. முத்தமிழ் அறிஞர் எனப் போற்றப்பட்ட கருணாநிதி, திருவாரூர் மாவட்டம் திருக்குவளையில் 1924 ஜூன் 3ஆம் தேதி பிறந்தார்.
ஒவ்வொரு ஆண்டும் கலைஞரின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி திமுகவினர் கொண்டாடுவது வழக்கம். கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி முதல்வர் ஸ்டாலின் அவரது நினைவிடத்தில் மரியாதை செய்தார்.
அவருடன், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் இருந்தனர். பின்னர், கருணாநிதியின் புகைப்படக் கண்காட்சியை முதல்வர் பார்வையிட்டார். தொடர்ந்து, அண்ணா நினைவிடத்திலும் முதல்வர் மரியாதை செலுத்தினார்
இதனிடையே, 101ஆவது பிறந்தநாளை முன்னிட்டு தனது எக்ஸ் தள பக்கத்தில் முதல்வர் ஸ்டாலின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “தலைவரே! பாதை அமைத்தீர்கள், பயணத்தை தொடர்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் வீடியோவில், “நவீன தமிழ்நாட்டை செதுக்கிய சிற்பி என்றும் இந்தியாவின் திசையை தீர்மானித்தவர் நீங்கள்” என்றும் புகழாரம் சூட்டியிருக்கிறார்.
தலைவரே! பாதை அமைத்தீர்கள்; பயணத்தைத் தொடர்கிறோம்!#கலைஞர்100 pic.twitter.com/7EnwdrOj7c
— M.K.Stalin (@mkstalin) June 3, 2024