எதிர்க்கட்சி தலைவரை தேர்வு செய்வதில் தொடர் இழுபறி… 2 மணிநேரமாக நீடிக்கும் ஆலோசனை!
எதிர்க்கட்சி தலைவரை தேர்வு செய்வதில் அதிமுகவில் தொடர் இழுபறி நீடிக்கும் நிலையில், அப்பகுதியில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.
சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியா? ஓ.பன்னீர்செல்வமா? என்பதை தேர்வு செய்வதற்கான ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு ஓபிஎஸ் – இபிஎஸ் இடையே கடும் போட்டி நிலவும் நிலையில், இன்று மீண்டும் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், 2 மணி நேரமாக நடந்து வரும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில், எதிர்க் கட்சித் தலைவரை தேர்வு செய்வதில், ஓ.பி.எஸ் – இ.பி.எஸ். இருதரப்புக்கு இடையே தொடர்ந்து போட்டி நிலவி வருவதாக கூறப்படுகிறது.
இன்று காலை 10 மணிக்கு தொடங்கிய அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் 2 மணி நேரமாகியும் முடிவு ஏதும் எடுக்க முடியாமல் தொடர் இழுபறியில் இருந்து வருகிறது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களிடைய வாக்குவாதம் நிலவி வருவதால், எதிர்க்கட்சி தலைவரை தேர்வு செய்ய முடியாமல் அதிமுக எம்எல்ஏக்கள் திணறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், எதிர்க்கட்சி தலைவர் பதவி வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருப்பதாகவும், ஆனால் ஓ.பன்னீர்செல்வம் அதனை விட்டுக்கொடுக்க மறுப்பு தெரிவித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே, அதிமுக எம்எஸ்ஏக்கள் கூட்டம் நடைபெற்று வரும் அக்கட்சி அலுவலகம் முன்பு ஏராளமான போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. ஓபிஎஸ் – இபிஎஸ் இடையே மோதல் ஏற்படலாம் என்பதால் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் 4 மணிநேரமாக நீடித்தும், எதிர்க்கட்சி தலைவர் யார் என்று முடிவு எட்டாத நிலையில், இன்று மீண்டும் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது என்பது குறிபிடத்தக்கது.