“தொடரும் கொடுமை;முற்றுப்புள்ளி வைக்க தமிழக அரசு உடனடியாக இதை செய்ய வேண்டும்” – டிடிவி தினகரன் வலியுறுத்தல்!

Default Image

பள்ளி மாணவிகள் மீதான பாலியல் சீண்டல்களை தவிர்க்க நிரந்தர வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு உடனடியாக வகுக்க வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

கோவை மாவட்டம், உக்கடம் பகுதியைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் நேற்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து,மாணவியின் பெற்றோர் உக்கடம் போலீசாரிடம் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சடலத்தை மீட்டு,  கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அப்போது தான் மாணவிக்கு பாலியல் தொல்லை இருந்து வந்தது தெரியவந்தது.

அதாவது,ஏற்கனவே படித்த சின்மயா வித்யாலயா என்ற பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி என்பவர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து ஏற்கனவே மாணவி வீட்டில் சொல்லி கதறி அழுதுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இதுபற்றி பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளனர். ஆனால் இந்த விசயம் வெளியே தெரிந்தால் பள்ளி பெயர் கெட்டுவிடும் என்பதால், அப்படியே மூடி மறைத்து விட்டதாகவும்,பள்ளி முதல்வர் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் இதனால் மனமுடைந்த மாணவி தற்கொலை செய்து கொண்டதாகவும் அவரது பெற்றோரும் உறவினரும் குற்றம் சாட்டினர்.

இதன்காரணமாக,ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி கைது செய்யப்பட்டார். அவர் மீது தற்கொலைக்கு தூண்டுதல்,போக்சோ உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.இதனைத் தொடர்ந்து.பள்ளி நிர்வாகத்தினர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் மாணவியின் மரணத்திற்கு நீதி வேண்டும் எனக் கூறி சக மாணவர்கள்,பெற்றோர், பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து,பள்ளி முதல்வர் மீதும் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு,அவரைப் பிடிக்க இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு விரைந்துள்ளது.

இந்நிலையில்,தமிழகத்தில் தொடர்ந்து பள்ளிக்குழந்தைகளுக்கு நிகழும் இத்தகைய கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டியது அவசியமென அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது”

“கோவையில் தனியார் பள்ளியின் 12-ம் வகுப்பு மாணவி, ஆசிரியரின் பாலியல் தொந்தரவால் தற்கொலை செய்துகொண்டிருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.தமிழகத்தில் அடுத்தடுத்து பள்ளிக்குழந்தைகளுக்கு நிகழும் இத்தகைய கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டியது அவசியம்.

இதற்கான நிரந்தர வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு உடனடியாக வகுப்பதுடன், அந்தந்த பள்ளி நிர்வாகங்களும் மாணவச்செல்வங்கள் மீது நடத்தப்படும் இத்தகைய அத்துமீறல்களைத் தடுப்பதில் முழு அக்கறை காட்டவேண்டும்”,என்று தெரிவித்துள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்