ஆன்லைன் சூதாட்டத்திற்கு தொடரும் தற்கொலைகள்.! நாமக்கல் இளைஞரின் தவறான முடிவு..!
ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்த நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ரியாஸ்கான் என்ற இளைஞர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இன்றைய டிஜிட்டல் உலகில் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை பலரும் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகி உள்ளனர். ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையானவர்கள் இதற்காக பணத்தை கடன் வாங்கியாவது விளையாட வேண்டும் என்று எண்ணத்திற்கு தள்ளப்படுகின்றனர். இறுதியில் கடன் அதிகமானதால் தற்கொலை செய்து கொள்கின்றனர்.
தற்பொழுது நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ரியாஸ்கான் என்பவர் ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்ததால் தற்கொலை செய்துகொண்டுள்ளார். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் வசித்துவரும் ரியாஸ்கான் என்பவர் செல்போன் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். அவரது பொழுதுபோக்கான ஆன்லைன் ரம்மியில் செல்போன் கடையில் வேலை பார்த்து சம்பாதித்த பணத்தை வைத்து விளையாடியுள்ளார்.
இதில் அவர் சம்பாதித்த மொத்த பணத்தை இழந்துள்ளார். பணத்தை இழந்த ரியாஸ்கான் வீட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்த போது திடீரென வாகனத்தை நிறுத்திவிட்டு காவிரி ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். ரியாஸ்கானின் இறப்பு அவரது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.