திட்டக்குழுவுடன் ஆலோசனை – முதல்வர் ஸ்டாலின் முக்கிய அறிவுரை!

Default Image

சென்னை:ஒரு ஆலோசனையை சொல்லும் போது அதன் ஏ டூ இசட் அனைத்தையும் அலசி ஆராய்ந்து பின்னர் அரசுக்கு வழங்க வேண்டும் என்று திட்டக்குழுவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழக முதல்வரும்,மாநிலத் திட்டக் குழுத் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில்  இன்று (18.1.2022) சென்னை,சேப்பாக்கம்,எழிலகத்தில் மாநிலத் திட்டக்குழு அலுவலகத்தில் துறை சார்ந்த நடவடிக்கைகள் தொடர்பாக ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆயவின்போது. மாநிலத் திட்டக்குழு துணைத் தலைவர் பேராசிரியர் ஜெ.ஜெயரஞ்சன் அவர்கள்,குழுவின் செயல்பாடுகள்,புதிய கொள்கைகள், மாநில புத்தாக்கத் திட்டங்கள் மற்றும் சமச்சீர் வளர்ச்சி நிதி திட்டங்கள்,இது தொடர்பான உறுப்பினர்களால் மேற்கொள்ளப்பட்ட துறைவாரியான ஆய்வுகள் மற்றும் அரசு துறை செயலாக்க ஆலோசனைகளைப் பற்றி விளக்கினார்.

இதனைத் தொடர்ந்து,மாநிலத் திட்டக் குழு ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பேசியதாவது:

“புதிய அரசு பொறுப்பேற்றதும் மாநில திட்டக் குழுவை புதிதாக அமைத்தோம். பேராசிரியர் ஜெயரஞ்சன் உள்ளிட்ட பல்துறையைச் சேர்ந்தவர்கள் இக்குழுவில் இடம்பெற்றீர்கள்.உங்கள் அனைவரது பணியும் கடந்த ஆறு மாத காலமாக ஆக்கபூர்வமாக அமைந்து வருவதை எண்ணி உண்மையில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

அனைவர்க்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். முதலமைச்சர் அலுவலகத்தோடும் அமைச்சர்களோடும் அரசுச் செயலாளர் களோடும்,நீங்கள் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறீர்கள்.அவர்களுக்கு ஆக்கப்பூர்வமான பல ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் நீங்கள் வழங்கி வருகிறீர்கள் என்பதை நான் அறிவேன்.

CM Stalin

இதே உற்சாகத்தோடு நீங்கள் அனைவரும் பணியாற்ற வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.உங்களது பணி என்பது மிகமிக முக்கியமானது. நீங்கள் வழிகாட்டும் இடத்தில் இருக்கிறீர்கள்.கைகாட்டியாக,கலங்கரை விளக்கமாக இருக்கிறீர்கள். எனவே தான் உங்கள் பணியை மிக மிக முக்கியமானது என்று சொன்னேன்.உங்களிடம் இருந்தும் இன்னும் கூடுதலாக பல்வேறு வழி காட்டுதல்கள் எங்களுக்கு வேண்டும் என்பதைச் சொல்வதற்காகத்தான் நான் இங்கு வந்துள்ளேன்.

மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழுவைச் சார்ந்த நீங்கள் அரசுக்கு பல்வேறு ஆலோசனைகளைச் சொல்கிறீர்கள்.இது போன்று செய்யலாம்,அது போல திட்டமிடலாம் – என்று உங்களிடம் இருந்து ஆலோசனைகள் எங்களுக்கு வருகின்றன.

உங்களிடம் இருந்து வரும் எண்ணங்கள்,ஆலோசனைகளாக மட்டுமில்லாமல்,அந்த எண்ணம் குறித்த முழுமையான செயல்வடிவமாக எங்களுக்கு கிடைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

புதிய புதிய எண்ணங்கள் உங்களுக்குத் தோன்றலாம்.அந்த எண்ணம் குறித்து அது பற்றிய வல்லுநர் குழுவுடன் நீங்களே ஆலோசனை நடத்தலாம்.குறிப்பிட்ட தொழிற்சாலைகளுக்கு நீங்களே போய் பார்க்கலாம்.அதன் நீள அகலங்கள் அனைத்தையும் நீங்களே தெரிந்து கொள்ளலாம்.

அதன் பிறகு அவற்றை மேம்படுத்த அதனை அரசுக்கு உங்களது திட்ட அறிக்கையாக நீங்கள் வழங்கலாம்.அதாவது ஒரு ஆலோசனையை நீங்கள் சொல்லும் போது அதன் ஏ டூ இசட் அனைத்தையும் நீங்களே அலசி ஆராய்ந்து எங்களுக்கு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

அதற்கு துறை வாரியான வல்லுநர்களை நீங்கள் சந்திக்கலாம். கலந்துரையாடல் நடத்தலாம்.வெளிமாவட்டங்களுக்குச் சென்று நீங்களே விவசாயிகளை, தொழிலதிபர்களை,இளைஞர்களை சந்திக்கலாம்.அவர்களது ஆலோசனையையும் பெறலாம்.இவ்வாறான செயல்முறைத் திட்டங்களோடு நீங்கள் பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.மிக முக்கியமான ஆலோசனையாக இருந்தால் அது குறித்த முழுமையான பரிசீலனைக்குப் பிறகு நீங்கள் அரசுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

தமிழகம் பல்வேறு வகைகளில் முன்னேறிய மாநிலமாக திகழ்கிறது.அது நமக்கு பெருமை தருவதாகும்.வளர்ச்சித் திட்டங்களையும் சமூக சீர்திருத்தத்தையும் இணைத்ததால் நம் மாநிலம் அடைந்த மாபெரும் பலன் அது.அதே நேரத்தில் முழுமையாக முன்னேற்றம் அடைந்துவிட்டோமா என்றால் இல்லை. அத்தகைய முழுமையான முன்னேற்றத்தை அடையத் தேவையானவை குறித்து நீங்கள் சிந்திக்க வேண்டும்.

மனிதவள மேம்பாடு,வாழ்க்கைத் தரம்,மனித வாழ்க்கையின் ஆயுள்,கல்வி கற்றல், குழந்தைகள் வளர்ப்பு,வறுமை ஒழிப்பு,மக்கள் நலவாழ்வு,மனித உரிமைகள், சமூகநீதி விளிம்பு நிலை மக்கள் இப்படி அனைத்து தரப்புகளிலும் நாம் மேம்பட்டவர்களாக மாற வேண்டும்.இத்தகைய குறியீடுகளை தமிழகத்தில் மேம்படுத்துவதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு முனைப்போடு இருக்கிறது.அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து நீங்கள் அரசுக்கு வழங்க வேண்டும்.

சமச்சீரான வளர்ச்சியை – அனைத்து மாவட்டங்களும் ஒரே மாதிரியான வளர்ச்சியை நான் அடிக்கடி சொல்லி வருகிறேன். அத்தகைய சமச்சீரான வளர்ச்சி நம்மிடம் இதுவரை இல்லை என் நாம் ஒப்புக் கொள்ள வேண்டும். தொழில் வளர்ச்சியில் மாவட்டத்துக்கு மாவட்டம் வேற்றுமை உள்ளது.அதே போல் கல்வியிலும் மாறுபாடு இருக்கிறது.சில மாவட்டத்தில் வறுமை குறைவாகவும், சில மாவட்டங்களில் அதிகமாக இருப்பதை நாம் கண்கிறோம்.

இந்த வேறுபாட்டையும் மாறுபாட்டையும் களைய தமிழகம் முழுமைக்குமான சமச்சீரான ஒரு வேலைத் திட்டம் தேவை.இவை நாளையே நடந்து விடும் என்று நினைக்கும் கற்பனாவாதி அல்ல நான்.ஆனால் சமசீரான வளர்ச்சிக்கான பயணத்தை நாம் உடனடியாக தொடங்கியாக வேண்டும் என்ற இலட்சியவாதியாக நான் என்னை உருவாக்கிக் கொள்ள நினைக்கிறேன்.

எத்தனையோ நல்ல பல திட்டங்களை வகுக்கிறோம்.அதுதான் தமிழகத்துக்கு முதலாவது,பல மாநிலங்களுக்கு முதலாவது,இந்தியாவுக்கு முதலாவது,ஒன்றிய அரசே இதனை பின்பற்றுகிறது என்று நாம் பெருமைப்பட்டுக் கொள்கிறோம். அத்தகைய திட்டமானது அடித்தட்டு மக்களைச் சென்றடைந்து விட்டதா? என்பதை நீங்கள் கண்காணிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

உரிய பலனைக் கொடுத்துள்ளதா என்பதை கள ஆய்வு மூலமாக நீங்கள் கண்காணித்து எங்களுக்குச் சொல்ல வேண்டும்.நல்ல திட்டமானது போய்ச் சேரவில்லை என்றால் அதனால் எந்த பயனும் இல்லை.அதனை கண்காணிப்பவர்களாக நீங்கள் இருக்க வேண்டும்.திட்டங்களை உருவாக்குவதற்கும் – அதனை நடைமுறைப்படுத்துவதற்குமான கால இடைவெளியைக் குறைக்க வேண்டும்.தமிழகத்தின் நிதி நெருக்கடியை நான் சொல்லத் தேவையில்லை. அநாவசியச் . செலவுகளைக் குறைப்பது குறித்த ஆலோசனைகள் தேவை.

நிதி திரட்டுதல் என்பது முக்கியமாக வரிவசூல் – பத்திரப்பதிவு – ஆயத்தீர்வை ஆகியவற்றின் மூலம் மட்டுமே வருகிறது.அதனைத் தாண்டி சுற்றுலா – சிறுகுறு தொழில்கள் – கைவினைப் பொருள்கள் – கைத்தறி போன்ற துறைகளின் மூலமாகவும் வருமானம் ஈட்டுவதற்கான வழிமுறைகள் வகுக்கப்பட வேண்டும்.
தொழில் உருவாக்கம் என்பது நிதி உருவாக்கமாகவும், வேலைவாய்ப்பு பெருக்கமாகவும் மாற வேண்டும்.கிராமப்புற மேம்பாடு குறித்து அக்கறையோடு நீங்கள் சிந்திக்க வேண்டும்.இப்படி எத்தனையோ வகைகளை நீங்கள் சிந்தித்து எங்களுக்கு வழிகாட்ட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

முதல் கூட்டத்தில் நான் சொன்னது தான்,சமூகநீதி – சமத்துவம் – சுயமரியாதை – மொழிப்பற்று – இன உரிமை – மாநில சுயாட்சி ஆகிய தத்துவங்களின் அடிதளத்தில் நிற்கும் இயக்கம் தான் திராவிட முன்னேற்றக் கழகம்.தமிழகத்தின் வளர்ச்சி என்பது – சமூகத்தின் வளர்ச்சியாக, வாழ்க்கை வளர்ச்சியாக, சிந்தனை வளர்ச்சியாக, பண்பாட்டு வளர்ச்சியாக இருக்க வேண்டும்.அதுதான் உண்மையான வளர்ச்சி. அத்தகைய வளர்ச்சிக்கு பெயர் சூட்ட வேண்டுமானால் அதுதான் ‘திராவிட மாடல்’.பொருளாதாரம் – கல்வி – சமூகம் – சிந்தனை – செயல்பாடு ஆகிய ஐந்தும் ஒரு சேர வளர வேண்டும். அதுதான் திராவிட மாடல் வளர்ச்சி,அதற்கு உங்களது வழிகாட்டுதல்கள் தேவை என்பதை மீண்டும் ஒருமுறை கூறுகிறேன்”,என்று தெரிவித்துள்ளார்.

இக்கூட்டத்தில், திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. விக்ரம் கபூர்.முழுநேர உறுப்பினர் பேராசிரியர் ராம. சீனுவாசன். உறுப்பினர் செயலர் திரு. த.சு. ராஜ் சேகர்.மாநிலத் திட்டக் குழு உறுப்பினர்களான திரு.மு. தீனபந்து, சட்டமன்ற உறுப்பினர் திரு டி.ஆர்.பி. ராஜா, சித்த மருத்துவர் கு. சிவராமன் மற்றும் முனைவர் நர்த்தகி நடராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடதக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

jan live news
Red Giant Movies vidamuyarchi
7GRainbowColony
GameChanger Trailer
heavy rain tn
power outage
Former ADMK Minister Sellur Raju