பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு – தேதி மாற்றம் செய்து அறிவிப்பு!
பொறியியல் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு செப்டம்பர் 17-ஆம் தொடங்குகிறது என்று தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு தேதியை மாற்றம் செய்து தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பிரிவில் கலந்தாய்வு நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது. இதனிடையே, பொறியியல் கல்லூரிகளில் பி.இ., பி.டெக் படிப்பில் சேர விண்ணப்பித்த மாணவர்களுக்கான, ரேண்டம் எண் கடந்த 25ம் தேதி வெளியானது.
இதனைத்தொடர்ந்து, செப் 4ம் தேதி வெளியிடப்பட இருந்த பொறியியல் மாணவ – மாணவிகளுக்காக தரவரிசை பட்டியல் வரும் 14ம் தேதி வெளியிடப்படும் என்று உயர்கல்வி துறை அறிவித்திருந்தது. இந்த நிலையில், தொழிற்கல்வி படிப்பில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு அடிப்படையிலான கலந்தாய்வு, செப். 17ம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவித்துள்ளது.
மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு பிரிவு உள்ளிட்ட மாணவர்களுக்கான சிறப்பு கலந்தாய்வும் அதே தேதிகளில் நடைபெறும் என்று கூறியுள்ளது. தொழிற்கல்வி மாணவர்களுக்கான கலந்தாய்வு செப்டம்பர் 24-ஆம் தேதி முதல் அக்டோபர் 5-ஆம் தேதி வரையிலும், பொதுப்பிரிவுக்கான கலந்தாய்வு செப்டம்பர் 24-ஆம் தேதி முதல் அக்டோபர் 17 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
மேலும், துணை கலந்தாய்வு அக்டோபர் 19-ஆம் தேதி முதல் 23-ம் தேதி வரையும், எஸ்சி, எஸ்டி பிரிவு கலந்தாய்வு அக்டோபர் 24 மற்றும் 25ம் தேதியுடன் கலந்தாய்வு நிறைவுபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கலந்தாய்வு ஆன்லைனில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.