என்ஜீனியரிங் படிப்பிற்கான கலந்தாய்வு.! தொடங்கும் முன்பே காலியான 47,671 இடங்கள் .!
என்ஜீனியரிங் படிப்புகளில் சேர்வதற்கான கலந்தாய்வு செப்டம்பர் மாதம் முதல் தொடங்கவுள்ள நிலையில், இப்போதே 47 ஆயிரத்து 671 இடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியானதை அடுத்து அவர்களில் பொறியியல் படிப்பு படிக்க விரும்பும் மாணவர்களுக்கான விண்ணப்பப்பதிவு கடந்த ஜூலை 15ம் தேதி முதல் தொடங்கி இந்த மாதம் 16ம் தேதி முடிவடைந்தது. அந்த வகையில் என்ஜீனியரிங் படிப்புகளில் சேர்வதற்கு 1 லட்சத்து 60 ஆயிரத்து 834 மாணவ மாணவிகள் விண்ணப்பித்துள்ளதாகவும், அதில் 1 லட்சத்து 31 ஆயிரத்து 436 பேர் விண்ணப்ப கட்டணம் செலுத்தியுள்ளதாகவும், விண்ணப்பம் கட்டணம் செலுத்தி சான்றிதழ் பதிவேற்றம் செய்தவர்கள் 1 லட்சத்து 14 ஆயிரத்து 206 பேர் மட்டும் தான் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், சான்றிதழ் பதிவேற்றம் செய்தவர்களுக்கான கலந்தாய்வு செப்டம்பர் மாதம் முதல் தொடங்கவுள்ளது. இதன் மூலம் 458 கல்லூரிகளில் 1 லட்சத்து 61 ஆயிரத்து 877 இடங்கள் நிரப்பப்படவுள்ளது. தற்போது சான்றிதழ் பதிவேற்றம் செய்தவர்கள் மட்டுமே கலந்தாய்வில் பங்கேற்க்க முடியும். எனவே, 1 லட்சத்து 14 ஆயிரத்து 206 பேர் மட்டுமே சான்றிதழ் பதிவேற்றம் செய்தவர்கள் என்பதால் கலந்தாய்வு தொடங்குவதற்கு முன்பே 1 லட்சத்து 61 ஆயிரத்து 877 இடங்களில் 4 7 ஆயிரத்து 671 இடங்கள் காலியாகிவிட்டதாக கூறப்படுகிறது. கடந்தாண்டு பொறியியல் படப்பிற்காக 1 லட்சத்து 75 ஆயிரம் இடங்கள் இருந்த நிலையில், அதில் 91 ஆயிரம் இடங்கள் காலியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.