தொழிலாளர்களுக்கு ‘ஹேப்பி நியூஸ்’.! 10 மணி முதல் 4 மணி வரை வேலை செய்ய வேண்டாம்…
சென்னை : கோடை வெயிலை கருத்தில் கொண்டு சென்னை, மதுரை மாவட்டங்களில் கட்டுமான தொழிலாளர்கள் குறிப்பிட்ட நேரத்தில் வேலை செய்ய வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோடை வெயிலின் தாக்கம் ஆண்டுதோறும் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதனால், பொதுவெளியில் கட்டுமான தொழில்கள் உள்ளிட்ட பல்வேறு வேலைகள் பார்க்கும் தொழிலாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். அவர்கள் நலனுக்காக அரசு மற்றும் தொழிலாளர் அமைப்புகள் பல்வேறு செயல்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இப்படியான கோடை கால சமயத்தில் தற்போது தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்து வந்தாலும், பல்வேறு இடங்களில் வெயிலின் தாக்கம் இருந்து கொண்டு தான் இருக்கிறது. அதனை கருத்தில் கொண்டு, தற்போது தொழிலக பாதுகாப்பு இயக்கம் ஓர் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி, சென்னை மற்றும் மதுரையில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை திறந்தவெளி கட்டுமானப் பணிகளை தொழிலாளர்கள் மேற்கொள்ள கூடாது என அனைத்து கட்டுமான நிறுவனங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவு மே இறுதி வரையில் நடைமுறையில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை வெயிலின் தாக்கம் காரணமாக தொழிலாளர்களின் உடல் நிலை கருத்தில் கொண்டு, அதனை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொழிலக பாதுகாப்பு இயக்கம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்பானது முறையாக பின்பற்றபடுகிறாதா என்பதை சென்னை மற்றும் மதுரை மாவட்ட இணை இயக்குனர்கள் கண்காணிக்க வேண்டும் என்றும் தொழிக பாதுகாப்பு இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.