“கோடநாடு வழக்கில் என்னை சேர்க்க சதி” – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு…!

Default Image

கோடநாடு வழக்கில் தன்னையும் சேர்க்க சதி நடப்பதாக  எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இன்று தொடக்கத்திலேயே எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தங்கியிருந்த கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பாக, ஏற்கனவே 3 ஆண்டுகளுக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட வழக்கு, தற்போது மீண்டும் புதிதாக வந்து இருக்கக்கூடிய அரசு கையில் எடுத்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு உடனடியாக முதல்வர் முக ஸ்டாலின்,”எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பதுபோல் அதிமுகவினரின் போக்கு உள்ளது என பேசியுள்ளார். முதல்வரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சட்டப்பேரவையில் அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டு, வெளிநடப்பு செய்தனர்.குறிப்பாக, முன்னதாகவே அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் கருப்பு பேஜ் அணிந்துகொண்டு சட்டப்பேரவைக்கு வந்தனர்.

இதனைத் தொடர்ந்து,பதாகைகளை ஏந்தி ஆர்ப்பட்டதிலும் ஈடுபட்டனர்.இதனையடுத்து,எந்த வழக்குகளுக்கும் அஞ்ச மாட்டோம்,அதை சட்டப்படி எதிர்கொள்வோம் என்றும்,இன்றும் நாளையும் பேரவையில் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கலந்து கொள்ளமாட்டார்கள் என்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

இந்நிலையில்,கோடநாடு வழக்கில் தன்னையும் சேர்க்க சதி நடப்பதாக  எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். மேலும்,இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கூறியதாவது:

கொள்ளை கும்பல்:

“மறைந்த அம்மா அவர்கள் இருந்த சமயத்தில் அவ்வப்போது கோடநாட்டில் இருக்கின்ற இல்லத்துக்கு சென்று ஓய்வெடுப்பது வழக்கம்.அவர் மறைவுக்குப் பிறகு அந்த வீட்டில் சில கொள்ளை கும்பல், சயான் மற்றும் அவரின் கூலிப்படையைச் சேர்ந்தவர்கள் கொள்ளையடிக்க முயற்சி செய்தனர்.அப்போது,அங்கிருந்த காவலாளி அதனை தடுத்தபோது, தாக்குதலுக்குட்பட்டு அவர் இறந்தார்.

ரகசிய வாக்குமூலம்:

இந்த கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் நீதிமன்ற விசாரணையில் இருக்கிறது. வழக்கு முடியும் தருவாயில் இருக்கின்ற இந்த சூழ்நிலையில், வேண்டுமென்றே திட்டமிட்டு திமுக அரசு சயானுக்கு சம்மன் அனுப்பி, ரகசியமாக வரச்செய்து வாக்குமூலம் பெற்றதாக செய்தி வெளியாகியுள்ளது.

என்னை சேர்க்க சதி:

அந்த வாக்குமூலத்தில் என்னையும் கழக முக்கிய நிர்வாகிகளையும் சேர்த்திருப்பதாக செய்தி வந்திருக்கிறது. இதனை வன்மையாக கண்டிக்கிறோம். ஏற்கெனவே அதிமுக அரசு விசாரணை நடத்தி, வழக்கு முடிய உள்ளது. முக்கிய சாட்சிகள் விசாரிக்கப்பட்டு, வரும் 27-ம் தேதி நீதிமன்ற விசாரணைக்கு வரும் சூழலில், ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு வேண்டுமென்றே திட்டமிட்டு அதிமுக தலைவர்கள் மீது,இவ்வாறு  வழக்குகள்போட்டு அச்சுறுத்தி, அதன்மூலம் அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கிறார்.அவை ஒருபோதும் நடக்காது.

குற்றவாளிகளுக்கு ஆதரவு:

இந்த வழக்கு சரியான வழியில் செல்வதற்கான நடவடிக்கைகளை அதிமுக அரசு எடுத்தது. இவர்களுக்கும் இந்த குற்றவாளிகளுக்கும் என்ன சம்பந்தம்? அந்த குற்றவாளிகளை காப்பாற்றுவதற்காக நீதிமன்றத்தில் திமுக வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோவன் ஆஜராகியிருக்கிறார். ஊட்டி செஷன்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, திமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் குற்றவாளிகளுக்கு ஆதரவாக ஆஜராகினர்.

நீதிபதிகள் உத்தரவு:

இப்படிப்பட்ட நிலையில்தான் ஆட்சி மாற்றம் ஏற்படுகிறது. இந்த வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என, ஊட்டி செஷன்ஸ் நீதிமன்றத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் 3 முறை மாறுபட்ட நீதிபதிகள் உத்தரவு வழங்கினர். டிராஃபிக் ராமசாமி உயிருடன் இருந்தபோது, திமுகவின் தூண்டுதலின்பேரில் இந்த வழக்கை மறுவிசாரணை நடத்த வேண்டுமென உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அந்த வழக்கு டிஸ்மிஸ் செய்யப்பட்டது.

சிஆர்பிசி 313:

இதனையடுத்து,திமுக ஆட்சிக்கு வந்ததும் திமுக வழக்கறிஞர்களை அரசு வழக்கறிஞர்களாக நியமிக்கின்றனர்.மேலும், குற்றவாளிகளுக்கு யார் ஆதரவாக வாதாடினார்களோ, அவர்கள் அரசு வழக்கறிஞர்களாகின்றனர். சிஆர்பிசி 313 இன் பேரில் சாட்சிகள் எல்லாம் விசாரிக்கப்பட்டவுடன் குற்றவாளியிடம் கேட்பார்கள். அப்போதும் சயான் எந்த கருத்தையும் சொல்லவில்லை. மறுவிசாரணையும் கோரவில்லை.

இருப்பினும்,அரசு வழக்கறிஞர்கள் வேண்டுமென்றே மறு விசாரணை வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர்.ஆனால், நீதிமன்றம் எந்த அனுமதியும் அதற்கு கொடுக்கவில்லை. 2020 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பே வழங்கியுள்ளது. ஒரு வழக்கின் விசாரணை முடியும் தருவாயில் உள்ள நிலையில், மறு விசாரணை வேண்டுமென்றால் நீதிமன்ற உத்தரவு பெற வேண்டும் என தீர்ப்பு வழங்கியுள்ளது.

பொய் வழக்கு:

இதனையெல்லாம் மறைத்து திமுக அரசு,அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் மீதும் என் மீதும் வீண் பழி சுமத்தி அவதூறு பரப்புவதற்காக பொய் வழக்கை ஜோடித்துக் கொண்டிருக்கின்றனர். அதிமுக எதற்கும் அஞ்சியது இல்லை.மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்கள் எவ்வளவோ எதிர்ப்புகளை எதிர்கொண்டு சாதித்தார்.அதேபோல மறைந்த அம்மா ஜெயலலிதா அவர்களும் பல்வேறு வழக்குகளை எதிர்கொண்டார்.

அதே வழியில் நாங்களும் பணிகளை தொடர்வோம்.ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்கள் பணியிலே தொய்வின்றி பணியாற்றும் கட்சி அதிமுக என்பதை நிரூபித்துக் காட்டுவோம்.திமுக அளித்த 505 வாக்குறுதிகளை முழுதாக நிறைவேற்ற முடியவில்லை. அதிலிருந்து மக்களை திசைதிருப்ப இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சாதாரண மக்களுக்கு என்ன பாதுகாப்பு:

இதற்கிடையில்,சயான், மனோஜ், வாளையார் ரவி உரையாடல், யூடியூப் சேனல் ஒன்றில் வெளியிடப்பட்டுள்ளது. அப்போதிலிருந்தே பொய் வழக்கு போட திமுக ஏற்பாடு செய்திருக்கிறது. ஆரம்ப காலத்திலிருந்தே குற்றவாளிகளுக்கு ஆதரவாக இருந்தது திமுக. எங்களுக்கே இந்த நிலைமை என்றால் . சாதாரண மக்களுக்கு என்ன பாதுகாப்பு கிடைக்கும்?

இவ்வழக்கில் தொடர்புடைய எல்லாரும் கேரளாவை சேர்ந்தவர்கள். பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள். இதனை கேள்வி நேரத்தில் நான் எடுத்துவைத்தும் பேசுவதற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. முதல்வர் ஸ்டாலினுக்குத்தான் மடியில் கணமிருக்கிறது. அதனால்தான் துடித்துக் கொண்டிருக்கிறார்.

குற்றவாளிகளுக்கு துணை:

மேலும்,கொலை,கொள்ளை,கற்பழிப்பு வழக்குகளில் உள்ள இந்த குற்றவாளிகளுக்கு ஆதரவாக ,திமுக ஏன் வாதாடுகிறது.இதனால்,திமுக அரசு எப்படி நாட்டை காப்பாற்றுவார்கள்.குற்றவாளிகளிடமிருந்து மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய அரசாங்கம்,மாறாக குற்றவாளிகளுக்கு துணை போகிகொண்டிருக்கிறது”,என்று தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
TVK Vijay Dharmapuri
Pradeep John -TN Rains
Kasthuri Shankar - Police Arrest
Arvind Kejriwal - Kailash Gahlot
Space X - Elon Musk
tn rainy