நீட் தேர்வை ரத்து செய்யாமல் பச்சைத்துரோகத்தை இனியும் செய்ய முற்பட்டால் விளைவுகள் விபரீதமாகிப் போகும் என சீமான் ஒரு அறிக்கையை வெளிட்டுள்ளார்.
இந்தியா முழுவதும் தற்போது நீட் தேர்வு தொடங்கியது, இன்று கொரோனா பரவலுக்கும் இடையே, திட்டமிட்டபடி நாடு முழுவதும் இன்று நீட் தேர்வுகள் இன்று மதியம் 2 மணி முதல் மாலை 5 மணிவரை நடைபெறுகிறது. தமிழகத்தில் 14 நகரங்களில் நீட் தேர்வுகள் நடைபெறுகிறது. அதில், மொத்தம் 1,17,990 மாணவர்கள் தேர்வை எழுதுகின்றனர்.
கொரோனா பரவும் சூழலில், நீட் தேர்வுகளை ஒத்திவைக்க பல்வேறு தலைவர்கள், அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வந்தனர். மேலும், நீட் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்துள்ள நிலையில், பலரும் அதிருப்தி அடைந்தனர்.
அந்த வகையில், இது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது டிவிட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளிட்டுள்ளார். அந்த அறிக்கையில், நீட் தேர்வு தந்த மன அழுத்தத்தால் மதுரையைச் சேர்ந்த தங்கை ஜோதிஸ்ரீ துர்காவும், தருமபுரியைச் சேர்ந்த தம்பி ஆதித்யாவும், திருச்செங்கோட்டையைச் சேர்ந்த தம்பி மோதிலாலும் ஒரே நாளில் தற்கொலை செய்துகொண்ட செய்தியறிந்து சொல்லொணாத் துயரமடைந்தேன். இரு நாட்களுக்கு முன்பாக அரியலூரைச் சேர்ந்த தம்பி விக்னேசு நீட் தேர்வினால் தற்கொலை செய்துகொண்ட பெரும் காயத்தின் சுவடு மறைவதற்குள்ளாகவே நடந்தேறிய இக்கொடும் நிகழ்வுகள் ஒட்டுமொத்த தமிழகத்தையுமே உலுக்கிப் போட்டிருக்கிறது. எவ்விதச் சொற்கள் கொண்டும் ஆற்றுப்படுத்த முடியாத அளவுக்குப் பேரிழப்பைச் சந்தித்து நிற்கிற அவர்களது குடும்பத்தினருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துத் துயரில் பங்கெடுக்கிறேன்.
தங்கை அனிதாவில் தொடங்கி மோதிலால் வரை நீட் எனும் கொலைக்கருவிக்குப் பலியாகும் இளந்தளிர்களின் மரணம் தொடர்கதையாகி வருவது பேரச்சத்தையும், பெருங்கவலையையும் தருகிறது. 2017 ஆம் ஆண்டு அனிதா, 2018 ஆம் ஆண்டுப் புதுச்சேரி சிவசங்கரி, விழுப்புரம் பிரதீபா, 2019 ஆம் ஆண்டுத் தஞ்சை வைசியா, திருப்பூர் ரிதுஸ்ரீ, விழுப்புரம் மோனிஷா, பெரம்பலூர் கீர்த்தனா, இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் நெல்லை தனலெட்சுமி , கோவை சுபஸ்ரீ, இம்மாதம் அரியலூர் விக்னேசு, மதுரை ஜோதிஸ்ரீ, தருமபுரி ஆதித்யா என நீளும் பிஞ்சுப்பிள்ளைகளின் மரணங்கள் பெரும் ரணத்தையும், தாங்கவியலா வேதனையையும் அளிக்கிறது.
மருத்துவராக ஆசைப்பட்டப் பிஞ்சுப்பிள்ளைகளின் கனவைக் கருக்கி, அவர்களது உயிரைக் குடித்திடும் ஆளும் வர்க்கத்தின் ஈவிரக்கமற்ற இச்செயல் அரசப்பயங்கரவாதத்தின் உச்சமாகும். இத்தகைய துயர்மிகு சூழலில், அநீதி இழைக்கப்படுவது கண்கூடாகத் தெரிந்தும் அதற்கெதிராக எதுவும் செய்ய இயலா கையறு நிலையில் நிற்கிறோமே? எனும் ஆற்றாமையும், அடக்கவியலா பெருங்கோபமும் நெஞ்சினுள் வன்மத்தை விதைக்கிறது. ஆத்திரம் ஊற்றாகப் பிறப்பெடுக்கிறது. நீட் தேர்வின் விளைவாக உயிரிழக்கும் தம்பி, தங்கைகளின் மரணம் என்பது தன்னுயிரைத் தானே மாய்த்துக் கொள்கிற தற்கொலை அல்ல! அவை அதிகாரத்திமிரினாலும், அடாவடித்தனத்தாலும் மத்திய, மாநில அரசுகள் கூட்டுசேர்ந்து செய்து முடித்தப் பச்சைப்படுகொலையாகும்.
தமிழர்களுக்கெதிரான மோடி அரசின் நயவஞ்சகத்தனமும், அதற்கு ஒத்திசைந்து போகும் எடப்பாடி பழனிச்சாமி அரசின் கையாலாகத்தனமுமே இத்தனை பேரின் உயிரைப் போக்கியிருக்கிறது. நீட் தேர்வில் தோல்வியுற்றதற்காகவோ, அதனை எதிர்கொள்ள முடியாததினாலோ உயிரைவிடும் எண்ணத்தைத் எனதருமைத் தம்பி, தங்கைகள் கைவிட வேண்டும். போர்க்குணமும், போராட்ட உணர்வும் மரபணுவிலே நிரம்பப் பெற்றிருக்கிற தமிழ்ப்பேரினத்தின் பிள்ளைகள் ஒருபோதும் நெஞ்சுரத்தையும், துணிவையும் இழக்கக்கூடாது என உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன்.
வாழ்க்கையை எதிர்கொண்டு போராடி, இலட்சியத்தில் ஈடேறி வெல்வதற்கு உள்ளவுறுதியை வளர்த்துக்கொள்ள வேண்டும் என தம்பி, தங்கையர்களுக்கு அண்ணனாக இருந்து அறிவுறுத்துகிறேன். 2017 ஆம் ஆண்டுத் தங்கை அனிதாவின் பேரிழப்பிற்குப் பிறகு, தமிழகம் கிளர்ந்தெழுந்து ஒற்றைக்குரலில் ஒருமித்துக் குரலெழுப்பியப் பிறகு, கொடுக்கப்பட்ட அரசியல் அழுத்தத்தின் விளைவாக, தமிழக அரசு நீட் தேர்விலிருந்து விலக்குக்கோரி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது. அத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மூன்று ஆண்டுகளைக் கடந்தும் அதற்கு இன்னும் மத்திய அரசு ஒப்புதல் தரவில்லை. இதனால்தான், ஒவ்வொரு வருடமும் தமிழக மாணவ, மாணவிகள் தற்கொலை செய்துகொள்வது இன்றுவரை தொடர்ந்து வருகிறது.
எட்டுகோடி தமிழ் மக்களின் பிரநிதித்துவத்தைப் பெற்ற தமிழக அரசின் சட்டமன்றத் தீர்மானத்திற்கு ஒப்புதல் தராமல் அதனைக் கிடப்பில் போட்டிருக்கும் மத்திய அரசின் செயல் இந்தியாவின் கூட்டாட்சித் தத்துவத்தைக் குலைக்கும் சனநாயகப் படுகொலையாகும். நீட் தேர்வினால் அடுத்தடுத்து நிகழும் பிள்ளைகளின் மரணங்கள் அத்தேர்வு முறையின் கோர முகத்தை அம்பலப்படுத்துகிறது. ஆகவே, அத்தேர்வு முறை தொடர இனியும் அனுமதித்தால் தமிழக மாணவர்களை ஒவ்வொருவராய் காவுவாங்கிவிடும் பேராபத்து நிறைந்திருக்கிறது. நீட் தேர்வால் இனியொரு உயிரோ, ஒரு மாணவரின் மருத்துவக் கனவோ பறிபோகக்கூடாது என்பதில் இனியேனும் தமிழக அரசு விழிப்புடன் இருக்க வேண்டும்.
எனவே, உச்ச நீதிமன்றத்தின் ஐவர் அமர்வில் கிடப்பிலிருக்கிற நீட் தேர்வு குறித்தான மறுசீராய்வு வழக்கை விரைந்து விசாரிக்கக்கோரி மனு அளித்து தமிழக அரசு சட்டப்போராட்டம் செய்ய வேண்டும் எனவும்,மத்திய அரசிற்கு அரசியல் அழுத்தமும், பெரும் நெருக்கடியும் தந்து நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கினைப் பெற்றுத் தர உடனடி நடவடிக்கைகளை முடுக்கிவிட வேண்டும் எனவும், மத்திய அரசு அதற்கு ஒப்புதல் தருவதோடு மட்டுமல்லாது நீட் தேர்வையே மொத்தமாய் ரத்துசெய்திட ஆணைப் பிறப்பிக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன். அதனைச் செய்ய மறுத்து, கள்ளமௌனம் சாதித்து காலங்கடத்தி பிணக்குவியல் மேலே நாற்காலியைப் போட்டு அமர்ந்திருக்கும் பச்சைத்துரோகத்தை இனியும் செய்ய முற்படுவார்களேயானால் எதிர்விளைவுகள் விபரீதமாய் போகுமென மத்திய, மாநில அரசுகளை நாம் தமிழர் கட்சி சார்பாக எச்சரிக்கிறேன் என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சென்னை : இராணுவ அதிகாரி மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட அமரன் திரைப்படம் தீபாவளி…
டெல்லி : 13 மாநிலங்களில் 48 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை இடைத்தேர்தல் முன்னிலை குறித்த நிலவரம் வெளியாகி…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் [நவம்பர் 23] இன்றைக்கான எபிசோடில் ரோகினியை மலேசியாவிற்கு டிக்கெட் போட சொல்லும் விஜயா. .அதிர்ச்சியில் …
தஞ்சை : மாவட்டத்தில் அ.தி.மு.கவின் கள ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணியும், திண்டுக்கல்…
மும்பை : மகாராஷ்டிரா மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எண்ணப்பட்டு முன்னணி நிலவரங்கள் வெளியாகி வருகின்றன. இதில் காலை முதலே…
ராஞ்சி : ஜார்கண்டில் மொத்தமாக உள்ள 81 தொகுதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. அதன்படி, முதல் கட்டமாக கடந்த…