மோடி அரசின் அமலாக்கத்துறைக்கெல்லாம் அஞ்சாமல் காங்கிரஸ் கட்சி களத்தில் நிற்கும் – ஜோதிமணி எம்.பி
மக்கள் விரோத மோடி ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் வரை ஓயாமல் போராடுவோம் என ஜோதிமணி எம்.பி ட்வீட்.
நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோருக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பி இருந்தது. அதன்படி, ராகுல் காந்தி விசாரணைக்கு ஆஜரான நிலையில், சோனியா காந்தி கொரோனா தொற்று காரணமாக விசாரணைக்கு ஆஜராகவில்லை.
இதனையடுத்து, இன்று விசாரணைக்கு ஆஜராக சோனியா காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது. அதன்படி, அமலாக்கத்துறை விசாரணைக்கு சோனியா காந்தி ஆஜராகியுள்ளார். இந்த நிலையில், சோனியாகாந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்துவதர்க்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் உட்பட பல இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் ஜோதிமணி எம்.பி அவர்கள் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இன்று நடைபெற்ற போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளோம். மோடி அரசு அரசியல் பழி வாங்கும் நடவடிக்கைக்காக முன்பு தலைவர் ராகுல் காந்தி , இன்று அன்னை சோனியா காந்தி மீது அமலாக்கத் துறையை ஏவிவிட்டு விசாரணை என்ற பெயரில் அராஜகம் செய்கிறது.
அரிசி, பால்,தயிர்,பென்சில் , மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு என்று அனைத்திற்கும் கொடுமையான வரி விதிக்கும் மக்கள் விரோத மோடி அரசிற்கு எதிராக ,காங்கிரஸ் கட்சி போராடி வருகிறது. இதனால் அமலாக்கத்துறையை ஏவி விட்டு காங்கிரஸ் கட்சியை அலைக்கழிக்கலாம் என்று மோடி அரசு நினைக்கிறது.
மோடி அரசின் அமலாக்கத்துறைக்கெல்லாம் அஞ்சாமல் காங்கிரஸ் கட்சி களத்தில் நிற்கும். மக்கள் விரோத மோடி ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் வரை ஓயாமல் போராடுவோம்.’ என பதிவிட்டுள்ளார்.
மோடி அரசின் அமலாக்கத்துறைக்கெல்லாம் அஞ்சாமல் காங்கிரஸ் கட்சி களத்தில் நிற்கும். மக்கள் விரோத மோடி ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் வரை ஓயாமல் போராடுவோம்.
— Jothimani (@jothims) July 21, 2022