காங்கிரஸ் எம்.பி.க்கள் சஸ்பெண்ட் – டி.ஆர் பாலு கண்டனம்
காங்கிரஸ் எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர் பாலு கண்டனம்.
மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்தே நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவை கூட்டத்தில் எதிர்க்கட்சியினர் விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சனைகளை முன்னெழுப்பி அமளியில் ஈடுப்பட்டு வந்தனர். இதனால் கடந்த வாரம் முழுவதும் இரு அவைகளும் முடங்கியது. இன்று தொடங்கிய மக்களவையில் அதே சூழல் ஏற்பட்டது.
எதிர்க்கட்சியினர் பதாகைகளை ஏந்தி வருவது, அவைத்தலைவர் இருக்கையை முற்றுகையிடுவது என தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, ரம்யா ஹரிதாஸ், டிஎன் பிரதாபன் ஆகிய 4 மக்களவை காங்கிரஸ் உறுப்பினர்கள், இந்த கூட்டத்தொடர் முழுவதும் கலந்து கொள்ள கூடாது என இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், மாணிக்கம் தாகூர், ஜோதிமணி உள்பட 4 காங்கிரஸ் எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு திமுக எம்பி டி.ஆர் பாலு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடை நீக்கம் செய்யப்பட்டிருப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது. எம்பிக்கள் இந்த கூட்டத்தொடர் முழுவதும் இடை நீக்கம் செய்யப்பட்டிருப்பது நடைமுறையில் இல்லாத ஒன்று.
மேலும், காங்கிரஸ் எம்பி-க்கள் இடைநீக்கம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கூறப்பட்டுள்ளது. நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சரின் பரிந்துரையின் பேரில் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார். ஜனநாயகத்திற்கு ஆபத்தான ஒன்று இந்த இடை நீக்கம், இது கண்டனத்திற்குரியது என்றும் தெரிவித்தார்.