பிரதமர் மோடி சிறந்த தலைவர்… பாஜகவில் இணைந்த காங். எம்எல்ஏ விஜயதரணி பேச்சு.!
மக்களவைத் தேர்தல் இன்னும் இரண்டு மாதங்களில் நடைபெறும் சூழலில், பல்வேறு அரசியல் நகர்வுகள் இந்திய அரசியலில் நடைபெற்று வருகின்றன. பல்வேறு முக்கிய தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள் வேறு கட்சிக்கு தாவும் நிலை தொடர்ந்து வருகிறது.
கடந்த சில நாட்களாகவே காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியே இருந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதாரணி தற்போது பாஜகவில் இணைந்துள்ளார். காங்கிரஸ் கட்சி சார்பாக கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் 2011, 2016 மற்றும் 2021 என மூன்று சட்டமன்ற தேர்தல்களிலும் தொடர்ச்சியாக வென்று சாதனை படைத்தவர் விஜயதாரணி.
இன்று டெல்லியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் முன்னிலையில் காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி பாஜகவில் இணைந்தார்.
ReadMore – மக்களவை தேர்தல்: ஆம் ஆத்மி – காங்கிரஸ் இடையே 4 மாநிலங்களில் தொகுதி உடன்பாடு!
பாஜகவில் இணைந்த பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், குழந்தை பருவம் முதல் நான் காங்கிரஸ் கட்சியில் இணைந்து செயலாற்றுகிறேன். இது என்னுடைய முதல் மாற்றமாகும். நான் விலகியதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. இது ஒரு கடினமான சூழல்தான். இருந்தாலும் எல்லாம் முடிந்துவிட்டது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் பல்வேறு நன்மைகள் மக்களுக்கு கிடைத்து வருகிறது. பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் கட்சியாக பாஜக உள்ளது. பாஜக ஆட்சி மக்களை நல்வழிப்படுத்த உதவி வருகிறது. பல்வேறு திட்டங்கள் மக்களுக்கு பயனளித்து வருகின்றன என்று பாஜகவில் இணைந்த பின்னர் விஜயதாரணி பேட்டி அளித்தார்
விஜயதரணி பாஜகவில் இணைந்த பின்னர் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக தமிழக காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது. மேலும் , கட்சி தாவல் நடவடிக்கை அவர் மீது பாயும் என்றும் காங்கிரஸ் தலைமையில் இருந்து கூறப்பட்டுள்ளது.