அமித்ஷா பேச்க்கு வலுக்கும் எதிர்ப்புகள்! ரயிலை மறித்த விசிக, போராட்டம் அறிவித்த திமுக…
அமித்ஷா பேச்சுக்கு எதிராக காங்கிரஸ், திமுக. விசிக உள்ளிட்ட கட்சியினர் தமிழகம் உள்ளிட்ட நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு பதில் கடவுள் பெயரை கூறினால் புண்ணியமாவது கிடைக்கும் என சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து இருந்தார்.
அம்பேத்கர் குறித்து அமித்ஷா கூறிய இந்த கருத்துக்களுக்கு எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் அமித்ஷா பேச்சுக்கு எதிராக கடும் கண்டனங்களை பதிவு செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து, இன்று காங்கிரஸ் கட்சி சார்பில் அமித்ஷா பேச்சுக்கு எதிராக நாடுதழுவிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, திமுக சார்பில் இன்று காலை 11.30 மணியளவில் தமிழகம் முழுவதும் அமித்ஷா பேச்சுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என திமுக தலைமை அறிவித்துள்ளது.
ஏற்கனவே, நேற்று விசிக சார்பில் நேற்று விருத்தாசலத்தில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. அப்போது 25 பேர் கைது செய்ப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். இன்றும் விசிக சார்பில் ஆம்பூரில் ரயில் மறியல் போராட்டத்தில் விசிகவினர் ஈடுபட்டனர். அதே போல சமுத்திரம், சின்னபாபு ஆகிய இடங்களிலும் விசிகவினர் ரயில் மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.