காங்கிரஸ் – திமுக கூட்டணி பலம் 14ஆக குறைவு – புதுச்சேரி நாராயணசாமி அரசுக்கு ஆபத்து?
நான்கு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்ததால் புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரி காமராஜர்நகர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ஜான் குமார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். புதுச்சேரி சபாநாயகர் சிவக்கொழுந்த்துவை பேரவையில் சந்தித்து ராஜினாமா கடிதம் அளித்தார் ஜான்குமார். இதனிடையே, முதல்வர் நாராயணசாமி போட்டியிடுவதற்காக நெல்லித்தோப்பு தொகுதியை 2016ல் விட்டுக் கொடுத்தவர் ஜான்குமார் என்பது குறிப்பிடப்படுகிறது.
சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், புதுச்சேரியில் இதுவரை நமச்சிவாயம், தீப்பாய்ந்தான், மல்லாடி, கிருஷ்ணராவ், ஜான்குமார் ஆகிய 4 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்துள்ளதால், புதுச்சேரியில் நாராயணசாமி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரி சட்டப்பேரவையில் மொத்தம் உள்ள 30 இடங்களில் காங்கிரஸ் – திமுக கூட்டணி பலம் 19ஆக இருந்த நிலையில், பாகூர் காங்கிரஸ் எம்எல்ஏ தனவேலுவை தகுதி நீக்கம் செய்ததால், காங்கிரஸ் கூட்டணி பலம் 18 ஆக குறைந்தது. தற்போது, நமச்சிவாயம், தீப்பாய்ந்தான், மல்லாடி, கிருஷ்ணராவ், ஜான்குமார் ஆகிய 4 பேர் ராஜினாமாவால் பலம் 14ஆக குறைந்து நாராயணசாமி அரசுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.