#BREAKING: காங்கிரஸ் – திமுக கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கியது..!
திமுக, காங்கிரஸ் இடையே அதிகாரப்பூர்வமாக தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை தொடங்கியது.
திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதற்காக கேரளா முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான உம்மன்சாண்டி நேற்று வருகை தந்தார். நேற்று காங்கிரஸ் மேலிடப்பொறுப்பாளர்கள் ஆலோசனை நடத்தினர். 4 மணி நேரத்திற்கு மேலாக நடந்த ஆலோசனையில் எந்த தொகுதி , எத்தனை தொகுதி என்பது குறித்து விவாதம் செய்யப்பட்டது.
காங்கிரஸ் சார்பில் 30 தொகுதிகள் கேட்க திட்டமிட்டுள்ளதாகவும், ஆனால் திமுக சார்பில் 20 முதல் 25 தொகுதிகள் வரை ஒதுக்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், காங்கிரஸ் சார்பில் 2016-ஆம் ஆண்டு வெற்றி பெற்ற 8 இடங்களையும் மீண்டும் கேட்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், இன்று திமுக, காங்கிரஸ் இடையே முதற்கட்டமாக அதிகாரப்பூர்வமாக தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது.
இந்த தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் தி.மு.க சார்பில் துரைமுருகன், டி.ஆர்.பாலு, கனிமொழி ஆகியோரும் காங்கிரஸ் சார்பில் உம்மன்சாண்டி, ரன்தீப்சிங் சுர்ஜிவாலா, தினேஷ் குண்டுராவ், கே.எஸ்.அழகிரி ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர்.