கொரோனா இல்லாத என் குடும்பத்தை அசிங்கப்படுத்தியதற்கு வாழ்த்துக்கள் – கோவையில் பேனர்!
கொரோனா இல்லாத எனது குடும்பத்தை அசிங்கப்படுத்தியதற்கு வாழ்த்துக்கள் என மாநகராட்சிக்கு பேனர் வைக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதிலும் கொரானா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இந்நிலையில் அரசு மக்களை இந்த பெருந்தொற்றில் இருந்து பாதுகாப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், கோவையில் உள்ள ஹோப் காலேஜ் எனும் பகுதியை சேர்ந்த ஒருவர் கடந்த 25ஆம் தேதி கொரோனா காரணமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரது குடும்பத்தில் உள்ள ஐந்து பேருக்கு மாநகராட்சி சார்பில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் நான்கு பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக கூறி அந்த குடும்பத்தின் முன் வீட்டின் முன்புறம் தகரம் அடித்து தனிமைப்படுத்தப்பட்ட பகுதி என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் அந்த வீட்டினர் மீண்டும் தனியார் மருத்துவமனையில் இது குறித்து சோதனை மேற்கொண்ட பொழுது, அவர்கள் நால்வருக்குமே கொரோனா இல்லை என சான்று வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த குடும்பத்தினர் கோவை மாநகராட்சியை கண்டித்து வினோதமான முறையில் பேனர் வைத்துள்ளனர். அதில் கொரோனா இல்லாத 4 பேருக்கு இருக்கு என்று முத்திரை குத்தி என்னையும் எனது குடும்பத்தினரையும் அசிங்கப்படுத்தியதற்கு வாழ்த்துக்கள் எனக் கூறி தனியார் மருத்துவமனையில் கொடுக்கப்பட்ட சான்றிதழையும் கீழே அச்சடித்து பேனர் ஒன்று வீட்டின் முன்பாக மாட்டியுள்ளனர். இது குறித்து மருத்துவர்கள் ஒருவர் கூறுகையில், கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் 4-5 தினத்திற்கு பின்பு மறு பரிசோதனை செய்தால் கொரோனா நோய் தொற்று இல்லை என்று வருவது இயல்பானது தான் எனவும், இருந்தாலும் சம்பந்தப்பட்ட நபர்களை தனிமைப்படுத்தி கொள்வது அவசியம் எனவும் கூறியுள்ளார்.