ஊராட்சி தலைவர் பதவி போட்டி – அடித்துக் கொலை செய்யப்பட்ட வங்கி மேலாளர்
- ஊரக உள்ளாட்சிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது.
- ஊராட்சித் தலைவர் பதவி குறித்த கூட்டம் நடைபெற்றபோது வங்கி மேலாளர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ளது கோட்டைப்பட்டி என்ற ஊராட்சி.ஊரக உள்ளாட்சிகளுக்கு வருகின்ற 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது.எனவே நேற்று கோட்டைப்பட்டி கிராமத்தில் ஊராட்சித் தலைவர் பதவி தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இந்த ஆலோசனை கூட்டத்தை அந்த ஊரைச் சேர்ந்த அதிமுக கிளைச் செயலாளரான ராமசுப்பு நடத்தினார் .ஆனால் அந்த கூட்டத்தில் ராமசுப்பு தனது ஆதாரவாளர்களை வைத்து மட்டும் கூட்டம் நடத்தியதாக கூறப்படுகிறது.இதனை அறிந்த அந்த பகுதியில் உள்ள வங்கி மேலாளர் சதீஸ்குமார் கூட்டம் நடத்த எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.இந்த மாதிரியான கூட்டத்திற்கு அனைவரையும் அழைத்து நடத்த வேண்டும் என்று கூறினார்.
இவர் இவ்வாறு கூறியதால் அங்கு மோதல் ஏற்பட்டது.இந்த மோதலில் சதீஸ்குமார் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.இதில் சுயநினைவை இழந்த அவரை அருகில் இருந்தவர்கள் சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தார்கள்.இந்த விவகாரம் குறித்த தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.பின்னர் அதிமுக கிளைச் செயலர் ராமசுப்பு , அவரது ஆதரவாளர்களான கணேசன், முத்துராஜ், சுப்புராம், ராம்குமார், சுப்புராஜ், செல்வராஜ் ஆகிய 7 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.