சென்னை : சென்னையில் இன்று கனமழை உடன் காற்றும் கடுமையாக வீசி வருவதால் பல இடங்களில் மரம் முறிந்து விழுந்து வருகிறது. இந்த நிலையில் சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் உள்ள கல்லறையின் மீது இளைஞர் ஒருவர் மயங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார். இதனையடுத்து அந்த இளைஞன் மரம் முறிந்து விழுந்ததில் உயிரிழந்துவிட்டார் என்று காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவலின் அடிப்படையில் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி அவர்கள், அந்த இளைஞன் உயிருடன் இருப்பதை அறிந்து உடனடியாக அவரை தனது முதுகில் சுமந்து சென்று ஆட்டோவில் ஏற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். தக்க நேரத்தில் இளைஞரை காப்பாற்ற முதுகில் சுமந்து சென்று மருத்துவமனையில் அனுமதிக்க உதவிய ஆய்வாளர் ராஜேஸ்வரி அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
இந்நிலையில், கனிமொழி எம்.பி அவர்கள் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இக்கட்டான சூழ்நிலைகளில் முன்களப் பணியாளர்களின் பங்களிப்பு மகத்தானது. உயிரிழந்து விட்டதாகக் கருதப்பட்ட இளைஞரை மருத்துவமனைக்கு அனுப்பிக் காப்பாற்ற உதவிய சென்னை டி.பி. சத்திரம் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி அவர்கள், மனிதத்தின் மீதான நம்பிக்கையை உறுதிப் படுத்தியிருக்கிறார்.’ என பதிவிட்டுள்ளார்.