குரங்கம்மை தொற்று உறுதி: தமிழக எல்லையில் உஷார் நிலை.!
தமிழக எல்லைப் பகுதியில் கேரளத்திலிருந்து வரும் வாகனங்களை சுகாதாரத் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை : ஹரியானா மாநிலத்தை தொட்ர்ந்து கேரளாவின் மலப்புரத்தில் 38 வயதான நபருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சமீபத்தில், துபாயில் இருந்து நாடு திரும்பிய அவர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் இருந்து வந்த நிலையில், குரங்கு அம்மை தொற்றுக்கான அறிகுறிகள் இருந்ததால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவரின் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்ததில், தொற்று உறுதியாகியுள்ளது. அதன்படி, அவருக்கு west African clade-2 வகை குரங்கு அம்மை வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதன் தாக்கம் சிறிய அளவிலேயே இருக்கும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து, தமிழக எல்லைகளில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. Mpox நோய்த் தொற்று பரவாமல் தடுப்பதற்காக தமிழக – கேரள மாநில எல்லைப் பகுதிகளில் சுகாதாரத் துறையினர் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளனர்.
ஏற்கனவே, நிபா வைரஸ் தமிழகத்துக்குள் பரவாமல் தடுக்கும் வகையில் கன்னியாகுமரி மாவட்ட எல்லையோர பகுதியான களியக்காவிளையில் நேற்று முதல் சுகாதாரத் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், நிபா வைரஸ் மற்றும் குரங்கம்மை தொற்று எதிரொலியாக, தமிழக எல்லைப் பகுதியில் கேரளத்திலிருந்து வரும் கார், வேன், சுற்றுலா பேருந்துகள் உள்ளிட்ட பெரும்பாலான வாகனங்களை தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.