ஒகேனக்கல் 2வது கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம் – ஓபிஎஸ்
ஒகேனக்கல் இரண்டாவது கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கர்நாடக அரசுக்கு ஓபிஎஸ் கண்டனம் தெரிவித்து அறிக்கை.
ரூ.1,928 கோடி மதிப்பில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் அமைக்கப்பட்டுள்ளது போல, இரண்டாம் கட்ட ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டமும் அமைக்கப்படும் என்று கடந்த சில நாள்களுக்கு முன்பு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதற்கு பலரும் வரவேற்பு அளித்தனர். ஆனால், கர்நாடக அரசு இந்த திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு அனுமதிக்க மாட்டோம் என்று எதிர்ப்பு தெரிவித்தது. ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் அமைக்கக் கூடாது என்பதற்காகப் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என்று கர்நாடக முதலமைச்சர் தெரிவித்திருந்தார்.
இதனைத்தொடர்ந்து, ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கர்நாடக அரசை கண்டித்து தமிழக அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. அந்தவகையில், தற்போது ஒகேனக்கல் இரண்டாவது கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம் தெரிவித்து அதிமுக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கர்நாடகாவில் உள்ள அணைகள் அனைத்தும் நிரம்பிய பிறகு உபரி நீரை திறந்துவிடுவதையும் வாடிக்கையாகக் கொண்டிருக்கின்ற கர்நாடக அரசுக்கு தமிழ்நாட்டிற்குள் மேற்கொள்ளவிருக்கும் ஒகேனக்கல் இரண்டாவது கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை தடுத்து நிறுத்த தார்மீக ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் உரிமை இல்லை.
இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதற்குரிய அனைத்து உரிமைகளும் தமிழ்நாட்டிற்கு உண்டு. இதனை இந்த அரசு நிச்சயம் நிறைவேற்ற வேண்டும். இதற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தனது முழு ஆதரவினை நல்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
மாண்புமிகு கழக ஒருங்கிணைப்பாளர் திரு. ஓ. பன்னீர்செல்வம் அவர்களின் அறிக்கை.
ஒகேனக்கல் இரண்டாவது கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம். pic.twitter.com/UvKxvXnmU9
— AIADMK (@AIADMKOfficial) January 23, 2022