#Justnow:திமுக அரசுக்கு கண்டனம் – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உண்ணாவிரதம்!
தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு கடந்த ஆண்டு ஆட்சி அமைத்ததிலிருந்து,தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்.அந்த வகையில்,அண்மையில் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 8 ஆண்டுகால ஆட்சியின் சாதனை விளக்க கூட்டத்தில் பங்கேற்ற அண்ணாமலை,”புலியை பார்த்து பூனை சூடு போட்டு கொண்டது என்று ஒரு பழமொழி உண்டு.அதைப் போல பிரதமர் மோடியை பார்த்து தானும் குட்டி மோடி ஆக வேண்டும் என்று ஆசைப்படுகிறார் மு.க.ஸ்டாலின்.குட்டி மோடியாக மாறவேண்டுமென்றால் அடித்தட்டு மக்களுக்காக உழைக்க வேண்டும்.
அதற்கு குடும்பத்தை மறந்து முதல்வர் உழைக்க வேண்டும்.ஆனால் திமுகவைப் பொறுத்தவரையில் குடும்பமே கட்சி,கட்சியை குடும்பம் என்ற நிலைதான் உள்ளது.திமுகவில் எது கட்சி, எது குடும்பம் என்று தெரியவில்லை”, என்றும் விமர்சித்திருந்தார்.
இந்நிலையில்,திமுக அரசைக் கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பாரதிய ஜனதா கட்சியினர் இன்று உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்கின்றனர்.திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு மோசமாக இருப்பதாகவும்,தேர்தல் வாக்குறுதிகள் பலவற்றை திமுக அரசு நிறைவேற்றவில்லை எனவும் பாஜக தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் நிலையில்,இன்று உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்துகிறது.அந்த வகையில்,சென்னை வள்ளுவர் கூட்டத்தில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று கலந்து கொள்கிறார் என்று கூறப்படுகிறது.