திமுகவின் அராஜக செயலுக்கும், சட்ட விரோத செயலுக்கும் கடும் கண்டனம் – ஓபிஎஸ்..!

Default Image

திமுகவினரின் அராஜகச் செயலுக்கு, சட்ட விரோதச் செயலுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், எங்கு பார்த்தாலும் பாலியல் கொடுமைகள் நிகழ்ந்து வருவதையும், பட்டப் பகலில் கொலைகள், கொள்ளைகள் அன்றாடம் நடைபெற்று வருவதையும், அரசு அதிகாரிகள், தொழிலதிபர்கள், இன்னும் சொல்லப்போனால் காவல் துறையினரும் தி.மு.க.வினரால் தினந்தோறும் மிரட்டப்படுவதையும், அரசின் ஒவ்வொரு அங்கத்திலும் தி.மு.க.வினரின் தலையீடு தலைவிரித்து ஆடுவது பற்றியும் நான் எனது அறிக்கைகள் வாயிலாக சுட்டிக்காட்டி இவற்றைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு பல வேண்டுகோளை விடுத்திருந்தேன்.

ஆனால் ஒருவிதமான நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. இதன் காரணமாக குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. சட்டம் ஒழுங்கு சீரழிந்து கொண்டே வருகிறது. கடந்த எட்டு மாத கால தி.மு.க. ஆட்சியில் ஒட்டுமொத்த தமிழர்களின் உயிருக்கும், உடைமைக்கும் ஆபத்து ஏற்படக்கூடிய உருவாகியுள்ளது. காவல் துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. வேலூர் மாவட்டம், வேப்பங்குப்பம் காவல் நிலையத்தில் சார் ஆய்வாளராக பணிபுரியும் சீனிவாசன் என்பவர் ஓர் ஒலிநாடா செய்தியை வெளியிட்டுள்ளார்.

அதில் தான் வேப்பங்குப்பம் காவல் நிலையத்தில் சார் ஆய்வாளளாக பணிபுரிவதாகவும், ஏலச் சீட்டு மோசடி சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யக்கூடாது என தி.மு.க. பிரமுகர்கள் மிரட்டுவதாகவும், வழக்குப் பதியாததற்கு உரிய காரணத்தை உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து விட்டதாகவும் மணல் கடத்தினால் வழக்குப் பதிவு செய்யக்கூடாது என்று சில தி.மு.க. பிரமுகர்கள் தொல்லைக் கொடுப்பதாகவும், இதன் காரணமாக உளைச்சல் அதிகமாகி உள்ளதாகவும், திமுகவினர் செய்யும் அராஜகங்களைப் பொறுத்துக் கொண்டு தன்னால் நிம்மதியாக வாழ முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளதாகவும், எனவே தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் அந்த சார் ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

இந்தச் செய்தி சமூக வலைதளங்களில் வேகமாக பரவிக் கொண்டிருப்பதாக செய்திகள் வந்துள்ளன. ஒரு காவல் சார் ஆய்வாளரே இந்த நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார் என்றால், மற்றவர்களின் நிலையை நினைத்துப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது. சட்டம் – ஒழுங்கை கையில் வைத்திருக்கும் முதலமைச்சரின் துறையிலே இதுபோன்ற அராஜகம் என்றால் மற்ற துறைகளில் கேட்கவே வேண்டாம். ‘ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்’ என்பது போல இதுபோல் எத்தனை ‘அதிகாரிகள் மிரட்டப்படுகிறார்கள் என்பது ஆண்டவனுக்குத் தான் வெளிச்சம், திமுகவினரின் இதுபோன்ற அராஜகச் செயலுக்கு, சட்ட விரோதச் செயலுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

GO

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்