காவலர்களுக்கான கட்டாய வார ஓய்வு – டிஜிபி சைலேந்திர பாபு முக்கிய தகவல்!
காவலர்களுக்கான கட்டாய வார ஓய்வு வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என டிஜிபி சைலேந்திரபாபு பேட்டி.
தமிழ்நாடு காவல்துறையில் சேலம் சரகத்தில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு சேலம் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் பரிசளிப்பு விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவில் கலந்துகொண்டு காவலர்களுக்கு பரிசளித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு, காவலர்களுக்கான கட்டாய வார ஓய்வு, பண்டிகை காலங்களிலும், சட்ட-ஒழுங்கு பிரச்னை சமயங்களிலும் கடைப்பிடிக்க இயலாது.
இதை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. காவலர்களுக்கு ஒரு நாள் விடுப்பு என்பதை கடைபிடிக்க, முடிந்த வரை அனைத்து காவல் நிலையங்களிலும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு பிரச்னை மற்றும் பண்டிகை காலங்களிலும், காவலர்களுக்கான கட்டாய வார ஓய்வு வழங்குவதில் சிக்கல் ஏற்படுகிறது. இதை சரி செய்யவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.
இதனிடையே பேசிய அவர், சேலம் மாநகரில் தற்போது 40% கொலை வழக்குகள் குறைந்துள்ளது. போதை பொருட்கள் தடை செய்வதில் சேலம் சரகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. போதைப்பொருள் இல்லாத மாவட்டங்களாக சேலம் சரகத்தை உருவாக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது எனவும் கூறினார்.