த.வெ.க கொடியால் புது சிக்கல்.? ஸ்பெயின் நாட்டுக் கொடி., கேரளா அரசின் சின்னம்.!
சென்னை : விஜயின் த.வெ.க கட்சி கொடியில் கேரள மாநில சின்னம் இருக்கிறது, ஸ்பெயின் நாட்டின் கொடி போல உள்ளது என குறிப்பிட்டு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
நடிகரும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவருமான விஜய் நேற்று தனது கட்சிக் கொடி, கட்சிப் பாடல் மற்றும் உறுதிமொழி ஆகியவற்றை அறிமுகம் செய்தார். இந்த நிகழ்வு நேற்று சென்னை பனையூரில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.
த.வெ.க கட்சிக் கொடி அறிமுகப்படுத்திய முதல் நாளே பல்வேறு சர்ச்சைகளை தமிழக வெற்றிக் கழகம் சந்தித்து வருகிறது. முன்னதாக கட்சிக் கொடியில் இடம்பெற்றுள்ள யானைகள் குறித்து சர்ச்சை எழுந்தது. தேசிய கட்சிகளில் ஒன்றான பகுஜன் சமாஜ்வாடி கட்சி, தங்கள் தேர்தல் சின்னமான யானை படத்தை விஜய்யின் த.வெ.க கட்சிக் கொடியில் இடம்பெற்று இருப்பது குறித்து அக்கட்சி பிரமுகர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.
தேர்தல் விதிமுறைகளின் படி, ஒரு கட்சியின் தேர்தல் சின்னத்தை இன்னொரு கட்சியின் தேர்தல் கட்சிக் கொடியில் பயன்படுத்தக் கூடாது என குறிப்பிட்டு இதனை தேர்தல் ஆணையத்தில் முறையிடுவோம் என அவர்கள் தரப்பில் கூறியதாக நேற்று தகவல்கள் வெளியாகி இருந்தன.
இதனை தொடர்ந்து தற்போது புதிய புகார் ஒன்று சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் தவெக கட்சி மீது அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகாரில் கூறப்பட்டிருப்பதாவது, இந்திய தேர்தல் விதிமுறைகளுக்கு புறம்பாக த.வெ.க கட்சிக் கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஸ்பெயின் நாட்டின் கொடியை அவமதிக்கும் வகையில் இந்த கொடி வடிவமைப்பு உள்ளது. மேலும், அந்த கொடியில் இடம்பெற்றுள்ள யானை, கேரள போக்குவரத்துத்துறை சின்னத்தில் இடம் பெற்று இருந்தது என்றும், இதனால் தேசகுற்ற வழக்கை தமிழக வெற்றிக் கழகம் மீதும், அதன் தலைவர் விஜய் மீதும் பதிவு செய்ய வேண்டும் என்று புகார் மனுவில் கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதற்கிடையில், கொடியின் நடுவில் உள்ள வாகை மலர், தமிழீழ இயக்கத்தின் தேசிய மரமான வாகை மரத்தின் பூ என்றும், சிலர் அது தூங்குமூஞ்சி பூ என்றும் இணையத்தில் குறிப்பிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.