முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான புகார்;கோடிக்கணக்கில் ஊழல் – FIR தகவல்..!
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது நெருக்கமானவர்களுக்கு மாநகராட்சி ஒப்பந்தம் அளித்ததன்மூலம் ரூ.811 கோடி ஊழல் செய்துள்ளதாக FIR இல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தகவல்.
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவர்கள், அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது அரசு ஒப்பந்தம் பெற்றுத் தருவதாக ரூ 1.20 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்தது.
வழக்குப்பதிவு:
இதனைத் தொடர்ந்து,திமுக எம்.பி. ஆர்.எஸ்.பாரதி மற்றும் அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் கொடுத்த ஊழல் புகாரில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட 17 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
53 இடங்களில் சோதனை:
இதனையடுத்து,அவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவரது வீட்டில் 10-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் காலை 6 மணி முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இவருக்கு சொந்தமான 53 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
முக்கிய ஆவணங்கள்:
அப்போது,கோவை வடவள்ளியில் உள்ள மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் சந்திர சேகர் வீட்டில் முக்கிய ஆவணங்கள் சிக்கியது. அவரது வீட்டில் வரவு, செலவு புத்தகம் ,ஹார்ட் டிஸ்க் உள்பட பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றி லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் எடுத்து சென்றுள்ளனர்.சென்னையில் 15,கோவையை பொறுத்தவரையில் 35 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
விசாரணை:
இதன்காரணமாக,அதிமுக கட்சி நிர்வாகிகள்,தொண்டர்கள் அவரின் வீட்டின் முன்பு திரண்டு போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதற்கிடையில்,டெண்டர்கள் மூலம் முறைகேடு செய்து சொத்து குவித்தது குறித்தும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் தொடர்ந்து 3 மணி நேரமாக சென்னையில் விசாரணை நடைபெற்று வருகிறது.
ஊழல்:
இந்த நிலையில்,எஸ்.பி.வேலுமணி அவர்கள் தனது நெருக்கமானவர்களுக்கு ஒப்பந்தம் அளித்ததன்மூலம், சென்னை மாநகராட்சி ஒப்பந்தத்தில் ரூ.464.02 கோடி மற்றும் கோவை மாநகராட்சி ஒப்பந்தத்தில் ரூ.346.81 கோடி என மொத்தம் ரூ.811 கோடி ஊழல் செய்ததாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட 17 பேர் மீதான FIR இல் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.