அமைச்சர்கள் புகார் கொடுப்பது அவர்கள் பயத்தை காட்டுகிறது – சசிகலா..!
பெங்களூர் சிறையில் இருந்து கடந்த 27-ம் தேதி விடுதலையான சசிகலா முதல் முறையாக பேசினார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கந்திகுப்பத்தில் ஆதரவாளர்கள் மத்தியில் காரில் இருந்தபடியே பேசிய சசிகலா, அதிமுக கொடியை நான் பயன்படுத்தியதற்காக அமைச்சர்கள் புகார் கொடுத்தது அவர்கள் பயத்தை காட்டுகிறது.
தொண்டர்களுக்காக நிச்சயமாக தீவிர அரசியலில் ஈடுபடுவேன். புரட்சித் தலைவி வழி வந்த ஒரு தாய் பிள்ளைகள் ஒற்றுமையோடு இணைந்து செயல்படுவதே என் விருப்பம். ஜெயலலிதா நினைவிடம் மூடப்பட்டது ஏன் என்பது தமிழக மக்களுக்கு நன்றாக தெரியும் என சசிகலா தெரிவித்தார்.
அன்புக்கு நான் அடிமை, தொண்டர்களுக்கும் மக்களுக்கும் நான் அடிமை. ஆனால், அடக்குமுறைக்கு நான் அடிபணிய மாட்டேன். கழகம் எத்தனையோ முறை சோதனைகளை சந்தித்திருக்கிறது. அப்போதெல்லாம் பீனிக்ஸ் பறவை போல மீண்டு வந்திருக்கிறது. புரட்சித் தலைவி வழி வந்த ஒரு தாய் பிள்ளைகள் ஒற்றுமையோடு இணைந்து செயல்படுவதே என் விருப்பம் என சசிகலா கூறினார்.
பெங்களூர் மருத்துவமனையில் இருந்து பண்ணை வீட்டிற்கு சென்றபோது சசிகலா அவரது காரில் அதிமுக கொடி இருந்தது. இது அதிமுகவினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, அதிமுக கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஒருவர் எப்படி அதிமுகவை கொடியை பயன்படுத்த முடியும் என அதிமுக தரப்பிலிருந்து பலர் கண்டனம் தெரிவித்தனர்.
இதை தொடர்ந்து கடந்த 5-ஆம் தேதி அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், சி.வி சண்முகம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி முனுசாமி ஆகியோர் டிஜிபி அலுவலகத்தில் சசிகலா மீது நேரடியாக புகார் அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.