மதத்தின் அடிப்படையில் பகைமை வளர்த்தால் கடும் நடவடிக்கை – காவல் ஆணையர் சங்கர் ஜிவால்
மதத்தின் அடிப்படையில் பகைமை அல்லது பொது அமைதியை குலைப்போர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் சேர்ந்த இளங்கோவன் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பாஜக இளைஞரணி தலைவர் வினோத் பி.செல்வம் அவரது ட்விட்டர் பக்கத்தில் பொய்யான தகவலை மக்களிடையே பரப்பும் நோக்கில் கருத்துக்களை பதிவிட்டுள்ளதாகவும், இந்த பதிவானது மதத்தின் அடிப்படையில் மக்களிடையே வெறுப்பையும், பகையையும் உருவாக்கி பொது அமைதியை குலைக்கும் வகையில் இருப்பதாகவும், எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறும் தெரிவித்திருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் வினோத் பி.செல்வம் மீது கலகம் செய்ய தூண்டிவிடுதல், அரசுக்கு எதிராக, பொது அமைதிக்கு எதிராக எந்த ஒரு நபரையும் குற்றம் செய்யத் தூண்டுதல் உட்பட மூன்று பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதனையடுத்து சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், மதத்தின் அடிப்படையில் பகைமை அல்லது பொது அமைதியை குலைப்போர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பொய்யான செய்திகள், உண்மை செய்திகளை திரித்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.