ஆணைய காலிடங்கள் நிரப்படும்.. இணையதளம் தமிழில் உருவாக்கப்படும் – முதல்வர் ஸ்டாலின்
மனித உரிமை ஆணையத்தில் காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு.
சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற மாநில மனித உரிமை ஆணைய வெள்ளி விழாவில் சிறப்பு விருந்தினராக முதலமைச்சர் முக ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது மனித உரிமை ஆணையத்தின் சார்பில் சிறப்பு நூலை முதல்வர், மனித உரிமை மீறல் புகார்களை சிறப்பாக கையாண்ட மாவட்ட ஆட்சியர்கள், எஸ்பிக்களுக்கு பரிசு மற்றும் விருதுகளை வழங்கினார்.
இதன்பின் இந்நிகழ்வில் பேசிய முதலமைச்சர், தமிழகத்தில் 1997-ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தான் மனித உரிமை ஆணையத்தை அமைத்தவர். உரிமைகள் பறிக்கப்படக்கூடாது என்பதில் கவனமாக உள்ளோம். மனித உரிமை மாண்புகள் போற்றி பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். மனித உரிமைகள் காக்கும் பொறுப்பில் இருந்து ஒருநாளும் தவற மாட்டோம் என தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து பேசிய முதலமைச்சர், மனித உரிமை ஆணையத்தில் காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் மனித உரிமை ஆணையத்தின் இணையதளம் தமிழில் உருவாக்கப்படும் எனவும் உறுதியளித்தார். மேலும், சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக மற்ற வேண்டும். உச்சநீதிமன்றத்தின் கிளையை சென்னையில் அமைத்திட வேண்டும் என்றும் இவ்விழாவில் கோரிக்கை விடுத்தார்.