“80 வகையான காய்ச்சலுக்கு கோமியம் மருந்து”…தமிழிசை சௌந்தரராஜன் பேச்சு!
கோமியத்தை குடித்தால் டாஸ்மாக் விற்பனை குறைந்து விடும் என நினைக்கிறார்கள் என பாஜகவை சேர்ந்த தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை : கோமியத்தில் நோய் எதிர்ப்பு சக்தி இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது எனவும், மாட்டு கோமியம் குடித்தால் காய்ச்சல் சரியாகும், கோமியத்திற்கு நோய் எதிர்ப்பு ஆற்றல் இருப்பதாக ஐஐடி இயக்குனர் காமகோடி பேசியது பெரும் சர்ச்சையாக வெடித்தது. இதற்கு, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சி பிரமுகர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், முன்னாள் ஆளுநரும், பாஜக மூத்த தலைவருமான தமிழிசை இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தபோது இது குறித்த கேள்வி அவரிடம் எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர் ” மாட்டு கோமியத்தில் ஆயுர்வேதம், ஆராய்ச்சி பூர்வமாக மைரோ ஆர்க்னிசத்தை காப்பாற்றும் சக்தி உள்ளது என கண்டுபிடித்து உள்ளனர்.
நமது தமிழ்நாட்டு சங்க இலக்கியத்தில் மாட்டு சாணம் பூசிய முற்றங்கள் சொல்லப்பட்டு உள்ளதா இல்லையா? மாட்டு சாணத்தில் கிருமி நாசினி உள்ளது என்றால், மாட்டு சிறுநீரிலும் கிருமி நாசினி உள்ளது. 80 வகையான காய்ச்சலுக்கு கோமியம் மருந்தாக உள்ளது கோமியம் என்பது மதுவை விட மோசமானது இல்லை. கோமியம் குடித்தால் டாஸ்மாக் விற்பனை குறைந்து விடுமோ என்று பயப்படுகிறார்கள்.
மாட்டு சாணத்தை பயன்படுத்துவார்கள், மாட்டுக்கறியைச் சாப்பிடுவார்கள், மாட்டின் கோமியம் மருந்து என்று சொன்னால் எதிர்க்கிறார்கள் ஆயுர்வேதத்தில் மருத்துவமாக கோமியத்தை பயன்படுத்தக் கூடாது என கூறுகிறார்கள்.
நான் அலோபதி மருத்துவராக இருந்தாலும் எனக்கு கோமியத்தில் மருத்துவ குணங்கள் உள்ளது என்ற நம்பிக்கை இருக்கிறது. அலோபதி மருத்துவரான நான் இதை பற்றி பேசுகிறேன் என்றால் விஞ்ஞானத்தால் நிரூபிக்கபட்டிருக்கிறது. எனவே, அதனால் தான் நான் இதனை பற்றி பேசுகிறேன். ஐஐடி இயக்குனரை இவர்கள் எப்படி ராஜினாமா செய்யுங்கள் என சொல்ல முடியும், கோமியம் குறித்து அவர் தனது அனுபவத்தை கூறியுள்ளார்” எனவும் காமகோடி பேச்சுக்கு ஆதரவு தெரிவித்து தமிழிசை பேசியுள்ளார்.