என் வீட்டிற்கு வந்து குப்பையை சுத்தம் செய்ய வேண்டும்! மறுத்து பேசிய தூய்மை பணியாளரை சரமாரியாக தாக்கிய கணவன் – மனைவி!
பெருங்குடி ஏரிக்கரை பகுதியை சேர்ந்தவர் கவிதா (36). பெருங்குடி மண்டலத்தில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இவர், சக ஊழியர்களுடன் நேற்று காலை பள்ளிக்கரணை 189வது வார்டுக்குட்பட்ட நேரு நகர் 5வது தெருவில் தூய்மை பணியில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில், அந்த தெருவில் வசிக்கும் ஆனந்தன் (58), என்பவர், ‘என் வீட்டிற்கு வந்து குப்பையை சுத்தம் செய்ய வேண்டும்,’ என தெரிவித்தார். அதற்கு கவிதா, ‘இப்பகுதியில் தெருக்களில் உள்ள குப்பையை மட்டும்தான் அகற்றுகிறோம். வீடுகளுக்கு சென்று குப்பையை அகற்றுவதில்லை’ என்று கூறியுள்ளார். இதனையடுத்து, இவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், வெளியில் வந்த ஆனந்தனின் மனைவி, கவிதாவிடம் வாக்குவாதம் செய்து, கவிதாவை சரமாரியாக தாக்கி, ஆடையை கிழித்து, காலால் எட்டி உதைத்து அங்குள்ள கால்வாயில் தள்ளியுள்ளனர். இதனையடுத்து, கவிதாவுடன் வந்த சக ஊழியர்கள், கவிதாவை மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்த புகாரின் பெயரில், பள்ளிகரணை போலீசார் ஆனந்தன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்து ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், அவரது மனைவியிடம் விசாரணை அந்தாதி வருகின்றனர்.