தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வாருங்கள் – எலான் மஸ்கிற்கு அழைப்பு விடுத்த அமைச்சர் தங்கம் தென்னரசு…!
இந்தியா மின்சார வாகன உற்பத்தியின் தலைநகரான தமிழகத்திற்கு முதலீடு செய்ய வாருங்கள் என அமைச்சர் தங்கம் தென்னரசு எலான் மஸ்க்கிற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இந்தியாவில் டெஸ்லா நிறுவனத்தின் கார்களுக்கு இறக்குமதி வரி சலுகை உள்ளிட்ட சலுகைகளை கோரி வருவதால் இந்தியாவில் டெஸ்லா நிறுவனத்தின் கார் கிடைப்பதற்கு சற்று காலதாமதம் ஆகிறது. எனவே இது குறித்து கேள்வி எழுப்பிய இந்தியாவை சேர்ந்த நபரிடம், உலகளவில் மின்சார கார்களை உற்பத்தி செய்து வரக்கூடிய டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க் பதிலளித்த போது, இந்திய அரசிடம் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருவதாக கூறியிருந்தார்.
இதனை அடுத்து தெலுங்கானா, மகாராஷ்டிரா, பஞ்சாப், மேற்கு வங்க அரசுகள் ஏற்கனவே தங்கள் மாநிலங்களில் முதலீடு செய்ய மஸ்க்கிற்கு அழைப்பு விடுத்துள்ளன. இந்நிலையில் தமிழகத்திலும் முதலீடு செய்ய வருமாறு தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் தற்போது அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், இந்தியாவின் மொத்த மின்சார உற்பத்தியில் தமிழகத்தின் பங்கு 34 சதவீதமாக இருப்பதாகவும், எனவே இந்தியாவின் மின்சார வாகன உற்பத்தியின் தலை நகரமாக விளங்கும் தமிழகத்திற்கு முதலீடு செய்ய வரவேற்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் உலகளவில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தியில் தமிழகம் ஒன்பதாவது இடத்தில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து எலான் மஸ்க்கிற்கு அழைப்பு விடுத்த ஐந்தாவது இந்திய அரசியல்வாதியாகியுள்ளார் தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு.
Hi Mr. Elon @elonmusk
I’m from Tamil Nadu.Tamil Nadu accounts for 34% share in total planned investments for Electric Vehicles. Welcome to India’s EV capital. Also Tamil Nadu is one of the top nine renewable energy markets in the world. #tnforpartnership pic.twitter.com/QEhJurYV5f— Thangam Thenarasu (@TThenarasu) January 17, 2022