கல்லூரிகளில் நடப்பு செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைன் முறையிலேயே நடத்த வேண்டும் – விஜயகாந்த்

Default Image

கல்லூரிகளில் நடப்பு செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைன் முறையிலேயே நடத்த வேண்டும் என கோரி விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கடந்த இரண்டு வருடமாக கொரோனா தொற்று தீவிரமாக பரவி வந்த நிலையில், கல்வி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்ததது. இதனால், மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக தான் பாடங்கள் நடத்தப்பட்டது. இந்நிலையில், தற்போது, தொற்று பரவல் குறைந்துள்ளதால், பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, கல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு நேரடியாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பல இடங்களில் மாணவர்கள், தங்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்பு நடத்தியதால், இந்த செமஸ்டர் தேர்வையும் ஆனலைனில் நடத்துமாறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘கொரோனா நோய் தொற்று காரணாமாக தமிழகம் முழுவதும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டிருந்தன. பின்னர் மாணவர்களின் நலன் கருதி ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. கொரோன தொற்று படிப்படியாக குறைந்து வரும் நிலையில், தற்போது பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டு . நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

கடந்த செப்டம்பர் மாதம் முதல் கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் நடந்து வந்தாலும் பண்டிகைகள் பருவமழை என அடிக்கடி விடுமுறை விடப்படுவதால், கல்லூரிகளில் நடப்பு தேர்வுக்கான பாடங்களை முழுமையாக முடிக்கப்படவில்லை என மாணவர்கள் கூறுகின்றனர். மேலும் ஆன்லைனில் வகுப்புகள் சரியாக நடைபெறவில்லை. ஆன்லைன் வகுப்புகளை எங்களால் சரிவர கவனிக்க முடியவில்லை என மாணவர்களே தெரிவித்துள்ளனர்.

இதுபோன்ற சூழலில் தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகள் நேரடியாகவே நடத்தப்படும் என்று தமிழக அரசு பிடிவாதமாக இருப்பது மாணவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆன்லைன் வகுப்புகளில் பாடங்களை முழுமையாக உள்வாங்க முடியாத நிலையில், நேரடி தேர்வுகள் நடத்தப்பட்டால், தேர்வில் தோல்வி அடைந்து விடுமோ என்ற அச்சம் மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

மேலும் நேரடி தேர்வுகள் நடத்த தமிழக அரசு இரண்டு மாதம் கால அவகாசம் வழங்கினாலும், அதற்குள் மாணவர்கள் தயாராவார்களா என்பது கேள்விகுறியே. எனவே மாணவர்களின் நலன் கருதி, நடப்பு செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைன் முறையிலேயே நடத்த வேண்டும். ஆன்லைனில் தேர்வுகளை நடத்தக் கோரி போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளையும் தமிழக அரசு உடனே திரும்ப பெற வேண்டும்.’ என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்