பொள்ளாச்சி பாலியல் கொடூரம்! தஞ்சையில் போராட்டத்தில் இறங்கிய கல்லூரி மாணவிகள்!!
- ஒட்டுமொத்த தமிழ் மாநிலத்தையே சில தினங்களாக நிலைகுலைய வாய்த்த சம்பவம் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை
- பாதிக்கபட்ட பெண்கள் நிலை அறிந்து விரைவில் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்
ஒட்டுமொத்த தமிழ் மாநிலத்தையே சில தினங்களாக நிலைகுலைய வாய்த்த சம்பவம் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை. கடந்த பல ஆண்டுகளாக சுமார் 250 க்கும் மேற்பட்ட பெண்களை ஆசை வார்த்தைகள் பேசி தன் வலையில் வீழ்த்தி கூட்டு வன்புணர்வு செய்துள்ளனர் சுமார் 20க்கும் மேற்பட்ட நபர்கள் கொண்ட கும்பல்.
இதில் முக்கிய குற்றவாளிகளாக கருதப்பட்ட திருநாவுக்கரசு, யஸ்வந், சபரி ராஜன் மற்றும் நாகராஜன் ஆகியோர் இம்மாதம் 5ஆம் தேதி கைது செய்யப்பட்டனர்.
இந்த குற்றவாளிகளின் பின்னணியில் பல அரசியல் பிரபலங்கள் இருப்பதால் காவல்துறை விசாரணை போக்கு சரியில்லை என குற்றங்கள் சாட்டப்பட்டனர்.
மேலும் இவர்களின் பின்னணியில் பல ஆளுங்கட்சி நபர்களும் இருக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதனால் டிஜிபி ராஜேந்திரன் வழக்கை சிபிசிஐடிக்கு விரைவில் மாற்றப்படும் எனவும் கூறினார்.
இருப்பினும் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நீதி வழங்க வேண்டும் என ஆங்காங்கே போராட்டங்கள் வெடித்துள்ளன. குறிப்பாக பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து கருப்புக் கொடி காட்டியும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
இதன் எதிரொலியாக தஞ்சாவூரில் கல்லூரி மாணவர்கள் பலர், பாதிக்கபட்ட பெண்கள் நிலை அறிந்து விரைவில் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.