அதிமுக எம்.எல்.ஏ-க்கள் அளித்த மனுவை அமர்ந்து கொண்டு வாங்கிய ஆட்சியர்…! கடிந்து கொண்ட பொள்ளாச்சி ஜெயராமன்…!
அதிமுக எம்.எல்.ஏ-க்கள் அளித்த மனுவை அமர்ந்து கொண்டு வாங்க முயன்ற கோவை மாவட்ட ஆட்சியர் சமீரனை கடிந்து கொண்ட பொள்ளாச்சி ஜெயராமன்.
கோவை ஆட்சியர் சமீரனிடம், மத்திய மாநில அரசுகளால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட திட்ட பணிகளை ரத்து செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை, கோவை மாவட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் கூட்டாக மனு அளித்தனர்.
அப்போது ஆட்சியர் சமீரன் தனது இருக்கையில் அமர்ந்தவாறு மனுவை பெற முயன்றார். அப்போது முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், தனது 25 ஆண்டுகளுக்கு மேலாக பொது வாழ்க்கையில் உள்ளதாகவும், சட்டமன்ற உறுப்பினர்கள் மனு அளிக்கும் போது, இப்படி அமர்ந்தவாறு வாங்குவீர்களா? இது என்ன புது பழக்கமாக உள்ளது? என கூறியுள்ளார்.
இதனையடுத்து, மாவட்ட ஆட்சியர் சமீரான் எழுந்துநின்று மனுவை வாங்கினார். இதனால், ஆட்சியர் அலுவலகத்தில் சற்று சலசலப்பு ஏற்பட்டது. இந்நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் சமீரனை மிரட்டியதாக, அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சூலூர் காவல்நிலையத்தில் திமுக பிரமுகர் தளபதி புகார் அளித்துள்ளார். மேலும், கொரோனா விதிகளை மீறி அதிகமானோர் ஆட்சியர் அலுவலகத்தில் கூடியதாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.