கோவை மாணவி தற்கொலை ! நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசிற்கு வேண்டுகோள் விடுத்த கனிமொழி .!
நீட் தேர்வு பயத்தால் கோவை மாணவி தற்கொலை செய்ததை தொடர்ந்து, இந்தாண்டாவது நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று திமுக எம்பி கனிமொழி மத்திய அரசிற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கோவையை சேர்ந்த ரவிச்சந்திரனின் மகளான சுபஸ்ரீ, கடந்த 2வருடங்களாக நீட் தேர்வுக்காக ஒரு தனியார் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வந்துள்ளார். கடந்தாண்டு பல் மருத்துவம் படிப்பதற்கான நீட் தேர்வு எழுதி தோல்வி அடைந்துள்ளார். பின்னர் பொது மருத்துவ படிப்பில் சேர இந்தாண்டிற்கான நீட் தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார்.
ஆனால் இந்தாண்டிற்கான நீட் தேர்வை கொரோனா பாதிப்பின் காரணமாக அடுத்த மாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கும் ரத்து செய்யப்பட்டது. இதனால் இந்த முறையும் தான் தோல்வி அடைவோமோ என்று நினைத்து மன அழுத்தத்தில் இருந்த சுபஸ்ரீ நேற்று மதியம் அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நீட் தேர்வுக்காக கோவை மாணவி இறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக பலர் தங்களது இரங்கல்களை தெரிவித்து வரும் நிலையில், திமுக எம்பி கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அவர் பகிர்ந்த பதிவில், நீட் தேர்வு அளிக்கும் மன அழுத்தம் தாங்காமல் மேலும் ஒரு கோவை மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளது மிகுந்த வேதனை அளிக்கிறது. கொரோனா காரணமாக, இந்த ஆண்டாவது மத்திய அரசு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.
நீட் தேர்வு அளிக்கும் மன அழுத்தம் தாங்காமல்,மேலும் ஒரு கோவை மாணவி தற்கொலை செய்துகொண்டுள்ளது மிகுந்த வேதனை அளிக்கிறது.
கொரோனா காரணமாக, இந்த ஆண்டாவது மத்திய அரசு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்.#NEET
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) August 19, 2020