கோவை குற்றாலத்தில் இன்று முதல் அனுமதி – சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!
கோவை குற்றாலத்தில் இன்று முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அண்மையில் பெய்த தொடர் மழை மற்றும் பருவ மழை காரணமாக நீர் வீழ்ச்சிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.குறிப்பாக, கோவை குற்றாலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக,கடந்த அக்டோபர் 4 முதல் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில்,கோவை குற்றாலத்தில் தற்போது நீர்வரத்து சீராக இருப்பதன் காரணமாக சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி,இன்று முதல் காலை 9 மணி – மதியம் 2 மணி வரை நான்கு கட்டங்களாக 150 பேர் என்ற வீதத்தில் தினமும் 600 பேர் அனுமதிக்கப்படுவர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மேலும், இதற்காக https://coimbatorewilderness.com/ என்ற இணையதளத்தில் முன்பதிவு பெறவேண்டும் என்றும் கோவை மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்ட வனத்துறையின் இத்தகைய அறிவிப்பு சுற்றுலா பயணிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.