ஜனவரியில் கூட்டணி அறிவிப்பு.,எம்.ஜி.ஆருக்கு பிறகு கேப்டன் தான் – பிரேமலதா விஜயகாந்த்
எம்.ஜி.ஆருக்கு பிறகு ஒரு புரட்சி தலைவர் என்றால் அது கேப்டன் தான் என்று மாவட்ட செயலாளர்களின் ஆலோசனை கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமையகத்தில் கட்சி தலைவர் விஜயகாந்த் தலைமையில் மாவட்ட செயலாளர்களின் ஆலோசனை நடைபெற்று வருகிறது.
இந்த கூட்டத்தில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், வரும் தேர்தல் தமிழகத்தின் முக்கிய தேர்தல், மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் விஜயகாந்த் நிச்சயம் பிரசாரம் மேற்கொள்வார். எம்.ஜி.ஆருக்கு பிறகு ஒரு புரட்சி தலைவர் என்றால் அது கேப்டன் தான். மக்கள் நல்ல முடிவை எடுக்க வேண்டும். கேப்டன் பிரச்சாரம் செய்வது குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.
சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரியில் விஜயகாந்த் அறிவிப்பார். மேலும், டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும், சாலைகள் சீரமைப்பு உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றம். புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 9 தீர்மானங்கள் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.