நிலக்கரி தட்டுப்பாடு.. தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தம்!
தூத்துக்குடி அனல் மின்நிலையத்தின் 3 யூனிட்டுகளில் மின் உற்பத்தி நிறுத்தம்.
நாட்டில் தமிழ்நாடு, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் நிலக்கரி தட்டுப்பாட்டால் அனல் மின் நிலையங்களில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு, பல மாநிலங்களில் மின் தடை நிலவுகிறது. இதனால் மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். இந்த நிலையில், நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக தூத்துக்குடி அனல் மின்நிலையத்தின் 3 யூனிட்டுகளில் மின் உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக 3 யூனிட்டுகளில் மொத்தம் 630 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 2 யூனிட்டுகள் மூலம் சுமார் 400 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. சுமார் 30 ஆயிரம் டன் நிலக்கரி மட்டுமே அனல் மின்நிலையத்தில் தற்போது கையிருப்பு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே, தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட 5 அலகுகள் உள்ளன. இதன் மூலமாக நாள் ஒன்றுக்கு 1,050 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 4 அலகுகளில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்ட நிலையில், இன்று 3 யூனிட்டுகளில் மின் உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. நிலக்கரி தட்டுப்பாடு பிரச்னை தீவிரமடைந்து வரும் நிலையில், உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய மின் துறை அமைச்சர் ராஜ் குமார் சிங் மற்றும் நிலக்கரி அமைச்சர் பிரகலாத் ஜோஷியுடன் நேற்று அவசர ஆலோசனை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.