“மீண்டும் மின்வெட்டு ஏற்படும் சூழல்;விலைவாசி உயரும் அபாயம்” – ஓபிஎஸ் எச்சரிக்கை…!
நிலக்கரி பற்றாகுறையால் தமிழகத்தில் மின்வெட்டு ஏற்பட்டு, அனைத்துப் பொருட்களின் விலையும் உச்சத்தை தொடக்கூடிய நிலைமை ஏற்படும் என்று ஓபிஎஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தின் அனல் மின் நிலையங்களில் 4 நாட்களுக்கான நிலக்கரி மட்டுமே கையிருப்பில் உள்ளதாக பத்திரிக்கைகளில் செய்திகள் வருவது கவலை அளிக்கும் வகையில் உள்ளதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
மேலும்,இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அன்னைப் பூமி:
“அரும்பொருட்களை தன்னுள் அடக்கி வைத்துக் கொண்டு, அவற்றின் வளத்தை அயராத உழைப்பாளர்களுக்கு அள்ளித் தந்து மகிழ்பவள் அன்னைப் பூமி. இத்தகைய அரும்பொருட்களில் ஒன்றான நிலக்கரி, நமக்கெல்லாம் மின்சாரத்தை தந்து, அதன்மூலம் நாட்டின் தொழில் வளர்ச்சியையும், விவசாய வளர்ச்சியையும், பொருளாதாரத்தையும் வெகுவாக உயர்த்த உறுதுணையாக இருக்கிறது.
உலக அளவில் பற்றாக்குறை:
இப்படிப்பட்ட இன்றியமையாத் தன்மை வாய்ந்த நிலக்கரிக்கு உலக அளவில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும், இது இந்தியாவை, குறிப்பாக தமிழ்நாட்டையும் விட்டு வைக்கவில்லை என்றும், தமிழ்நாட்டில் உள்ள அனல் மின்நிலையங்களில் நான்கு நாட்களுக்கான நிலக்கரி மட்டுமே கையிருப்பில் உள்ளதாகவும், கடந்த செப்டம்பர் மாதம் முதல் இந்திய நிலக்கரி நிறுவனத்திடமிருந்து பெறப்படும் அளவு குறைந்து வருவதாகவும், தமிழ்நாட்டின் தினசரி நிலக்கரி தேவை 62.000 டன் என்றிருக்கின்ற நிலையில், 60 விழுக்காடு நிலக்கரி தான் தமிழ்நாட்டிற்கு அனுப்பப்படுகிறது என்றும்,
பத்திரிகைகளில் வந்த செய்தி:
சர்வதேச சந்தையில் நிலக்கரி விலை உயர்ந்ததன் காரணமாக, ஏற்கெனவே நீண்ட கால மற்றும் நடுத்தர கால ஒப்பந்தம் செய்து கொண்ட நிறுவனங்களும் தங்களுடைய உறுதிமொழியை நிறைவேற்றாத சூழ்நிலையில் இருப்பதாகவும், நிலக்கரி பற்றாக்குறை காரணமாக தமிழ்நாட்டில் உள்ள தனியார் அனல் மின் நிலையங்கள் மற்றும் கூட்டு முயற்சியுடன் துவங்கப்பட்ட அனல் மின் நிலையங்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், தற்போதைய நிலைமை ஐயத்திற்கு இடமளிக்கக்கூடியதாக இருப்பதாகவும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் தினசரி 64,000 டன் நிலக்கரி அனுப்பப்பட வேண்டும் என்று மத்திய அரசின் நிறுவனத்தை தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும், 20,000 டன் நிலக்கரி குறைவாக மத்திய அரசின் நிறுவனத்தால் அனுப்பப்படுவதாகவும் பத்திரிகையில் செய்திகள் வந்துள்ளனன.
அனல் மின் நிலையங்களின் தினசரி நிலக்கரி தேவையில் 20,000 டன் மத்திய அரசின் நிறுவனத்தால் குறைத்து அனுப்பப்படுவதன் காரணமாக, அனல் மின் நிலையங்களில் உள்ள நிலக்கரியின் இருப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இது மிகவும் கவலை அளிக்கக்கூடிய ஒன்றாகும்.
மீண்டும் மின்வெட்டு?:
இந்த நிலைமை நீடித்தால், தமிழ்நாட்டில் ஆங்காங்கே மின் வெட்டு வரக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டு, பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவதுடன், இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கின்ற தமிழ்நாட்டின் பொருளாதாரமும் வீழ்ச்சி அடையக்கூடிய நிலைக்கு தள்ளப்பட்டு அனைத்துப் பொருட்களின் விலையும் உச்சத்தை தொடக்கூடிய நிலைமை ஏற்படும். இந்த நிலைமையை தடுத்து நிறுத்த வேண்டிய கடமையும், பொறுப்பும் மாநில அரசிற்கு உண்டு.
எனவே,மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இந்தப் பிரச்சனையில் தனிக் கவனம் செலுத்தி, மத்திய அரசின் நிலக்கரித் துறை அமைச்சருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தமிழ்நாட்டிற்கு தேவையான நிலக்கரி விநியோகிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும், இந்தப் பிரச்சனைக்கு ஒரு நிரந்தரத் தீர்வு காணும் வகையில், ஒடிசா மாநிலம் சந்திரபிலா நிலக்கரி தொகுதியிலிருந்து நிலக்கரி எடுக்க மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான அமைச்சகத்தின் அனுமதியை பெற தேவையான அழுத்தத்தை மத்திய அரசிற்கு அளித்து அங்கு மேம்பாட்டுப் பணிகளை துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்”,என்று தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் அனல் மின் நிலையங்களில் 4 நாட்களுக்கான நிலக்கரி மட்டுமே கையிருப்பில் உள்ளதாக பத்திரிக்கைகளில் செய்திகள் வருவது கவலை அளிக்கக்கூடியதாக உள்ளது.
உடனடியாக மத்திய அரசின் நிலக்கரித் துறை அமைச்சரை அணுகி தமிழகத்திற்கு தேவையான நிலக்கரி விநியோகிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். pic.twitter.com/UTyO5GeBpc
— O Panneerselvam (@OfficeOfOPS) October 8, 2021