கூட்டுறவு சங்க தேர்தல் – விதிகளை மீறினால் ஓராண்டு சிறை..10 ஆயிரம் அபராதம்!
தமிழ்நாடு மாநில கூட்டுறவு சங்கங்களின் புதிய தேர்தல் நடத்தை விதிகள் தேர்தல் ஆணையத்தால் அறிவிப்பு.
கூட்டுறவு சங்கத் தேர்தல்கள் சுதந்திரமாகவும், நியாயமாகவும், வெளிப்படைத் தன்மையுடனும் தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையம் நடத்த வேண்டிய அவசியத்தை முன்னிட்டு, ஆணையத்திற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை கொண்டு தேர்தல் நடத்தை விதிகளை ஆணையம் ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில், அவ்விதிகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு புதிய நடத்தை விதிகள் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. இனிவரும் கூட்டுறவு சங்கத் தேர்தல் அறிவிப்புகளுக்கு இவ்விதிகள் பொருந்துவதாகும்.
ஆணையத்தால் சங்க நிர்வாகத்திற்கு வழங்கப்பட்ட சட்டப்பூர்வ கட்டளைகளை செயல்படுத்தாது இருப்பது சட்டப்பிரிவு 157ன் கீழ் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கக்கூடிய குற்றமாகும். நடத்தை விதிகளை புறக்கணிப்பதன் மூலம் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தேர்தல் நடவடிக்கைகளில் சாதக பாதக விளைவுகளை ஏற்படுத்துவதானது, சட்டப்பிரிவு 162-ன் கீழ் ஓராண்டு வரை சிறைத் தண்டனை மற்றும் ரூ.10000/- வரை அபராதம் விதிக்கக்கூடிய குற்றமாகும் எனத் தேர்தல் ஆணையத்தால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதாவது, தமிழ்நாடு மாநில கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணைய நடத்தை விதிகளை மீறினால் ஓராண்டு சிறை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிப்பு என உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, தேர்தல் திட்டம் அறிவிக்கப்பட்ட சங்கங்களுக்கு இவ்வகையான நிகழ்வுகளுக்கு இடம் தராது, நடத்தை விதிகளை முழுவதுமாகவும் முறையாகவும் பின்பற்றிடவும், சங்கத்தின் தேர்தங்களை சுதந்திரமாகவும், நேர்மையாகவும், வெளிப்படை தன்மையுடனும், சட்ட விதிகளுக்குட்பட்டு நடத்துவதையும், அவ்வாறு நடத்தப்படுவதை அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களும் உறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.