முதலமைச்சர், து .முதலமைச்சர் பதிலளிக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
டெல்லி உயர்நீதிமன்றம், இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில், தமிழக முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் தலைமைத் தேர்தல் ஆணையம் 3 நாட்களில் பதிலளிக்குமாறு, உத்தரவிட்டுள்ளது. இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி பழனிசாமி – ஓ.பன்னீர்செல்வம் அணியினருக்கு ஒதுக்கிய தலைமைத் தேர்தல் ஆணையம், அவர்களது அணியே அதிமுக என்றும் அங்கீகாரம் வழங்கியது.
இதை எதிர்த்து, டி.டி.வி.தினகரன் தொடர்ந்த வழக்கு, டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்குடன், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தனக்கு ஒதுக்கிய குக்கர் சின்னத்தையே உள்ளாட்சித் தேர்தலிலும் தமது அணியினருக்கு ஒதுக்க வேண்டும் என டி.டி.வி.தினகரன் கூடுதல் மனுவை தாக்கல் செய்தார்.
அந்த மனுவுக்கு நேற்று பதிலளித்த தலைமைத் தேர்தல் ஆணையம், தினகரன் அணி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி கிடையாது என்றும், மாநிலத் தேர்தல் ஆணையம் நடத்தும் உள்ளாட்சித் தேர்தலில் தாங்கள் தலையிட முடியாது என்றும் கூறியது.
இந்த வழக்கை மீண்டும் இன்று விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், உள்ளாட்சித் தேர்தலில் குக்கர் சின்னம் ஒதுக்கக் கோரிய வழக்கு விசாரணையை பிப்ரவரி 15ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
மேலும், இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தலைமைத் தேர்தல் ஆணையம் தரப்பினர் 3 நாட்களுக்குள் பதிலளிக்கவும் டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.