மு.க.ஸ்டாலின் ஒத்துழைக்குமாறு முதலமைச்சர் வேண்டுகோள்!
போக்குவரத்துத் தொழிலாளர் பிரச்சினையில் முதலமைச்சர் தலையிட்டு சுமுகத் தீர்வு காணவும், அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவும் கோரி எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்தார்.
அப்போது போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ஒத்துழைப்பு அளிக்குமாறு அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கேட்டுக்கொண்டார்.
ஒத்துழைப்பு தரத் தயார் என்று தெரிவித்த மு.க.ஸ்டாலின், போக்குவரத்துத் தொழிலாளர் பிரச்சினையில் முதலமைச்சர் தலையிட வலியுறுத்தினார். அதற்கு, தனது ஆலோசனையின் பேரிலேயே ஊதிய ஒப்பந்தம் போடப்பட்டதாகத் தெரிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தொழிலாளர் பிரச்சினையில் தனக்கு ஆர்வமில்லை என்று கூறுவதை ஏற்கமுடியாது என்று கூறினார். பிரச்சினையை சுமூகமாகத் தீர்ப்பதே அரசின் நோக்கம் என்ற அவர், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தொழிற்சங்கங்களிடம் பேசி போராட்டத்தைக் கைவிடச் செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.
இதனிடையே, பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருந்த போதே பேச்சுவார்த்தை தோல்வியடைந்துவிட்டதாக தி.மு.க. தொழிற்சங்கமான தொ.மு.ச. வாட்ஸ் அப்பில் செய்தி பரப்பியதே குழப்பத்துக்கு காரணம் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.
source: dinasuvadu.com