திமுக உள்ளவரை பாஜக இங்கு காலூன்ற முடியாது: முதல்வர் ஸ்டாலின்

M.K.Stalin: மாநில அரசு எப்படிச் செயல்பட வேண்டும் என்பதற்கு தமிழ்நாடு தான் எடுத்துக்காட்டு. மத்திய அரசு எப்படிச் செயல்படக்கூடாது என்பதற்கு பாஜக தான் எடுத்துக்காட்டு என முதல்வர் பேச்சு.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19-ந் தேதி ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர். தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்து வருகிறார்.

அந்த வகையில் சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன் பாளையத்தில் சேலம் மக்களவை தொகுதி தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி, கள்ளக்குறிச்சி தி.மு.க. வேட்பாளர் மலையரசன் ஆகியோரை ஆதரித்து பேசினார். அவர் பேசுகையில், “போதைப் பொருள் அதிகளவில் கைப்பற்றப்பட்ட டாப் 10 மாநிலங்களில் 7 மாநிலங்களில் பாஜக ஆட்சிதான் நடக்கிறது.

இந்தப் பட்டியலில் தமிழ்நாடு இல்லவே இல்லை. அபாண்டமான குற்றச்சாட்டுகளைக் கூறி தமிழ்நாட்டு மக்களையும் இளைஞர்களைப் பற்றியும் அவதூறு செய்வது ஏன்? என்னிடம் இருக்கும் பெயர் பட்டியலில் சட்டம் ஒழுங்கை கெடுக்கும் ரவுடிகளின் பெயர்கள் உள்ளன. 32 பக்கங்கள் கொண்ட இந்தப் பட்டியலில் 1977 வழக்குகளில் சம்பந்தப்பட்ட 261 ரவுடிகள் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் பாஜகவில் இருக்கிறார்கள்.

திடீரென்று ஜெயலலிதா மீது ஏன் மோடிக்கு இவ்வளவு பாசம் பொங்குகிறது. தமிழ்நாட்டு மீனவர்கள் தாக்கப்படுவதற்கு காரணம் ஜெயலலிதாவே காரணம் என கூறியவர் மோடி. இந்தியாவிலேயே அதிக ஊழல் நடைபெறும் ஆட்சி ஜெயலலிதா ஆட்சி என்று அவர் கூறியிருக்கிறார். ஆனால் இப்போது மோடியின் கண்ணீரை அவரது கண்களே நம்பாது, தமிழர்கள் மட்டும் எப்படி நம்புவார்கள்? உச்சகட்ட தோல்வி பயத்தில் இருக்கிறார் மோடி. மற்ற மாநிலங்களுக்கு மட்டுமல்ல, நாட்டுக்கே முன்னோடியாக திகழ்கிறது தமிழ்நாடு.

மாநில அரசு எப்படிச் செயல்பட வேண்டும் என்பதற்கு தமிழ்நாடு தான் எடுத்துக்காட்டு. மத்திய அரசு எப்படிச் செயல்படக்கூடாது என்பதற்கு பாஜகதான் எடுத்துக்காட்டு. திமுக இருக்கும் வரை தமிழ்நாட்டில் பாஜக காலூன்ற முடியாது.

சமூகநீதி பேசும் ராமதாஸ் சமூக நீதிக்கு எதிரான பாஜகவுடன் கூட்டணி அமைத்தது ஏன்? பாஜக – பாமக கூட்டணி அமைத்திருப்பது சந்தர்ப்பவாத கூட்டணி. தமிழகத்தில் மக்களவை தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட வேட்பாளர்கள் கூட இல்லை, அதனால் தான் முன்னாள் ஆளுநர், எம்.எல்.ஏக்கள் போட்டியிடுகின்றனர்” என்றார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்