“உண்மையை மறைத்து தவறாக பேசுவது வெட்கக்கேடானது”! முதல்வருக்கு பதிலடி கொடுத்த எடப்பாடி பழனிசாமி!
UPA அரசாங்கம் ஆட்சியில் இருந்தபோது கனிமச் சுரங்கங்களை அவர்களுக்கு வேண்டியவர்களுக்கு உரிமம் வழங்கினார்கள் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை : மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டு அதற்கான நடவடிக்கைகளை எடுத்துவருவதாக வெளியான தகவலை தொடர்ந்து இன்று அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்த தீர்மானித்தின் மீதான விவாதத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வந்தனர்.
அப்போது எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ” சுரங்கம் அமைத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என மக்கள் போராட்டம் நடத்தியதன் பிறகு தான், முதலமைச்சர் கடிதம் எழுதுகிறார். ஒப்பந்தம் கோரிய போதே, தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து இருந்தால், இன்று அதனை தடுத்து நிறுத்தி இருக்கலாம். ஆனால், அதனை தமிழக அரசு ஆரம்பத்திலேயே செய்யவில்லை” என தெரிவித்து இருந்தார்.
சட்டப்பேரவை இன்று முடிவடைந்த பிறகு எதிர்க்கட்சி பழனிசாமியை விமர்சிக்கும் வகையில், முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் “சுரங்கம் மற்றும் கனிமத் திருத்தச் சட்ட வரைவிற்கு நாடாளுமன்றத்தில் ஆதரித்து வாக்களித்துவிட்டு, இப்போது சட்டப்பேரவையில் தமிழ்நாட்டின் நலனுக்காகப் பேசுவதுபோல் நடிக்கும் பழனிசாமி அவதூறுகளைப் பரப்பி உயிர்வாழும் அ.தி.மு.க.வின் துரோக வரலாற்றுக்கு அடையாளமாய் இருக்கிறார்” என நேரடியாக விமர்சித்து இருந்தார்.
தன்னை பற்றி விமர்சனம் செய்த முதல்வர் முகஸ்டாலினுக்கு பதிலளிக்கும் விதமாக தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியீட்டு இருக்கிறார். அதில் ” UPA அரசில் திமுக அங்கம் வகித்த போது, கனிம வளங்களை ஏலம் விடாமல், தனியாருக்கு தாரை வார்த்து கொள்ளை அடிக்கப்பட்டது மற்றும் UPA அரசாங்கம் ஆட்சியில் இருந்தபோது கனிமச் சுரங்கங்களை அவர்களுக்கு வேண்டியவர்களுக்கு உரிமம் வழங்கினார்கள்.
NDA ஆட்சியில் கனிம வள உரிமங்கள் ஏலமுறையில் விடப்படும் என்ற சட்டத்திருத்தம் கொண்டு வந்து, கனிம வள ஊழலை தடுக்க ஏலமுறையை ஆதரித்துதான் தம்பிதுரை அவர்கள் பேசி உள்ளார். தமிழகத்தில் டங்ஸ்டன் சுரங்கம் ஏலம் விடுவதைப்பற்றி தம்பிதுரை நாடாளுமன்றத்தில் எவ்வித கருத்தையும் பேசவில்லை.
இந்த கனிம வள திருத்தச் சட்டம் 2023 நாடாளுமன்றத்தில் கொண்டு வந்த போது, திமுக M.P-க்கள் எவ்வித எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை. உண்மையை மறைத்து, என்னைப்பற்றி இப்படி தவறான தகவலை ஸ்டாலின் ‘X’ வலைதளத்தில் வெளியிட்டு கீழ்தரமான அரசியல் ஆதாயம் தேடுவது வெட்கக்கேடானது. கேவலமானது” என காட்டத்துடன் எடப்பாடி பழனிசாமி பதிவிட்டுள்ளார்.
UPA அரசில் திமுக அங்கம் வகித்த போது, கனிம வளங்களை ஏலம் விடாமல், தனியாருக்கு தாரை வார்த்து கொள்ளை அடிக்கப்பட்டது மற்றும் UPA அரசாங்கம் ஆட்சியில் இருந்தபோது கனிமச் சுரங்கங்களை அவர்களுக்கு வேண்டியவர்களுக்கு உரிமம் வழங்கினார்கள்.
NDA ஆட்சியில் கனிம வள உரிமங்கள் ஏலமுறையில் விடப்படும்…
— Edappadi K Palaniswami – Say No To Drugs & DMK (@EPSTamilNadu) December 9, 2024