பிரதமர் 2014இல் கொடுக்காத வாக்குறுதிகளை அளித்ததாக முதல்வர் கூறுகிறார்; அண்ணாமலை.!
தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு தேர்தல் பயம் வந்துவிட்டது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, முதல்வர் ஸ்டாலினுக்கு தேர்தல் பயம் வந்துவிட்டதால், பாஜக அரசு 2014இல் கொடுக்காத வாக்குறுதிகளையெல்லாம் கொடுத்ததாக முதல்வர் ஸ்டாலின் பேசிவருகிறார் என தெரிவித்துள்ளார். முன்னதாக முதல்வர் ஸ்டாலின், இன்று பொதுநிகழ்வில் பேசியபோது, நமது திமுக அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றி வருவது சிலருக்கு எரிச்சலை ஊட்டுகிறது.
அதனால் நமது திட்டத்தை விமர்சிக்கின்றனர். 2014இல் பாஜக அரசு ஆட்சிப் பொறுப்பேற்கும் முன் கொடுத்த வாக்குறுதியில், வெளிநாடுகளில் உள்ள கருப்பு பணத்தை மீட்டு, ஒவ்வொரு குடிமகனின் வங்கிக்கணக்கில் 15 லட்சம் வழங்குவதாக அறிவித்தது என்னானது என்றும், 15 ஆயிரம் கூட வழங்கவில்லை என்றும் கூறியிருந்தார்.
இதற்கு அண்ணாமலை பதிலளித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அவர் தனது டிவீட்டில், வெளிநாடுகளில் அவ்வளவு பணம் ஊழல்வாதிகள் பதுக்கிவைத்துள்ளனர் என்று தான் பிரதமர் மோடி குறிப்பிட்டிருந்தார், அந்த பணத்தை ஒவ்வொரு இந்திய குடிமகனின் வங்கி கணக்கில் செலுத்துவோம் என கூறவில்லை என்று பதிலளித்திருக்கிறார்.
தமிழக முதல்வர் திரு @mkstalin அவர்களுக்கு தோல்வி பயம் மூண்டு விட்டது போல் தெரிகிறது.
ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் முடிந்த பின்னரும் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஊழல் ஆட்சியை நடத்திவரும் தமிழக முதல்வர் திரு @mkstalin, 2014ஆம் ஆண்டு மத்திய பாஜக அரசு… pic.twitter.com/P4Z9nnFbsY
— K.Annamalai (@annamalai_k) July 9, 2023
திமுகவினர் போன்ற ஊழல்வாதிகள் என்று பிரதமர் குறிப்பிடவில்லையே, தங்களுக்கு ஏன் இவ்வளவு பதட்டம் வருகிறது என்று கேள்வி எழுப்பிய அண்ணாமலை, கடந்த 9 ஆண்டுகளில், 1.25 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான கருப்பு பணம் மீட்கப்பட்டுள்ளது என்பதும், 11 கோடி விவசாய பெருங்குடி மக்களுக்கு வருடம் 6000 ரூபாய் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வருவதும் திமுகவுக்கு தெரியாமல் இருப்பது ஆச்சர்யம் தான் என்றும் பதிவிட்டிருக்கிறார்.