“அன்னை மண்ணைப் பிரிந்து அயலகத்தில்..” முதல்வர் மு.க.ஸ்டாலின் உருக்கமான நன்றி.!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அமெரிக்காவில் உள்ள தமிழர்கள் கொடுத்த வரவேற்பை பாராட்டி, மனம் நெகிழ்ந்து அவரே, தனது சமூக வலைதள பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.
சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 17 நாட்கள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். கடந்த வாரம் சான் பிராசிஸ்கோவில் நடைபெற்ற முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்ற முதலமைச்சர் அங்குள்ள பன்னாட்டு தொழில் நிறுவனங்களின் முக்கிய அதிகாரிகள் மத்தியில் உரையாற்றி, தமிழகத்தில் தொழில் தொடங்க எதுவாக உள்ள சூழல் பற்றி விவரித்தார்.
இதனை அடுத்து, முதல் நாளிலேயே தமிழ்நாட்டில் முதலீடு செய்ய 6 முன்னணி பன்னாட்டு நிறுவனங்களுடன் சுமார் 900 கோடி ருபாய் முதலீட்டில் தோராயமாக 4000 பேருக்கு வேலை கிடைக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
அதன் பிறகு, கூகுள், மைக்ரோசாப்ட், ஆப்பிள் போன்ற பெரு நிறுவனங்களில் அலுவலகங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட சென்றார். அப்போது மேற்கண்ட நிறுவனங்களும் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக தகவல்கள் வெளியாகின.
அதனைஅடுத்து, சான் பிராசிஸ்கோவில் உள்ள தமிழர்கள் உடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு நிகழ்த்தினார். இந்த நிகழ்வில் அவர் பேசுகையில், ” நான் சான் பிராசிஸ்கோவில் இருக்கிறேனா ? அல்லது சென்னையில் இருக்கிறேனா என்ற சந்தேகம் எழுகிறது. இங்கு உங்களை பார்க்கும் போது தமிழ்நாட்டில் இருப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது.
இங்குள்ள தமிழர்களை பார்க்கும் போது இந்தியாவில் இருக்கும் ஒரு மாநிமாக அமெரிக்கா உள்ளது தெரியவந்தது. சென்னையில் உள்ள உணவை இங்கு எனக்கு நீங்கள் கொடுத்தீர்கள். அமெரிக்காவில் வசிக்கும் அயலக மக்களில் இந்திய மக்கள் 2வது இடத்தில் உள்ளனர். இந்தியாய்விலேயே 2வது பெரிய பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் அமெரிக்க நிறுவனங்கள் அதிகளவில் தமிழ்நாட்டில் முதலீடு செய்துள்ளன. ” என தெரிவித்தார்.
அதனை அடுத்து தனது எக்ஸ் பக்கத்தில் முதலமைச்சர் பதிவிடுகையில், “அன்னை மண்ணைப் பிரிந்து அயலகத்தில் இருக்கிறேன் என்ற உணர்வே எழாத வகையில் வாஞ்சையோடு என்னை அணைத்துக்கொள்ளும் நம் உறவுகள். தங்களது உழைப்பாலும் – அறிவாலும் வாய்ப்புகளை அமைத்துக் கொண்டு அமெரிக்க நாட்டில் உயர்ந்து கொண்டிருக்கும் இவர்களுக்கு அன்பும் நன்றியும்.” என் பதிவிட்டுள்ளார் .